

ஆண்டிபட்டியில் பூ மார்க்கெட்டை திறக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் பூக்களை விற்பனை செய்ய முடியாத விவசாயிகள் அவற்றை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரக் கிராமங்களில் பூ விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. இங்கு விளையும் பூக்களை, ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் மார்க்கெட்டில் உள்ள கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் வயல்களில் இருந்து வழக்கம்போல பூக்களை பறித்து விற்பனைக்காக நேற்று கொண்டு வந்திருந்தனர். ஆனால், கடைகள் திறக்காததால் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் பரிதவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மதுரை - தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த பூக்களை சாலையில் கொட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பூக்கள் விரைவில் அழுகி விடும். எனவே இவற்றை விற்பனை செய்ய வசதி செய்து தர வேண்டும் என்று விவசாயிகள் கூறினர். இதற்குப் போலீஸார் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாததால் கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை. பூ வியாபாரத்துக்கு வேறு இடம் தேர்வு செய்து தரப்படும் என்றனர்.
இதனைத் தொடர்ந்து மொத்த வியாபாரிகளிடம் சாலையிலேயே பூக்களை விற்பனை செய்து விட்டு விவசாயிகள் கிளம்பிச் சென்றனர்.
விவசாயிகள் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தமிழக மலர் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் ஓ.சின்னச்சாமி கூறுகையில், தேனி மற்றும் பிற மாவட்டங்களில் பூ விற்பனைக்கு தடையில்லை. ஆண்டிபட்டியில்மட்டும் விற்பனை செய்ய முடிவதில்லை. தற்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தற்காலிக கடைகள் அமைக்க பேரூராட்சி அனுமதித்துள்ளது. கரோனா பிரச்சினை முடியும் வரை மார்க்கெட் இங்குதான் செயல்பட உள்ளது என்றார்.