

புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் கடந்த 11 நாட்களாக எரிந்து கொண்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவால் புகை சூழ்ந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
புதுச்சேரி வில்லியனூர் அருகேபிள்ளையார்குப்பம் வழுதாவூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகளாக மாறிக் கிடந்தன.
இந்த பிளாஸ்டிக் குப்பை குவியலில் கடந்த 26-ம் தேதி திடீரென தீப்பிடித்தது. தீ கிடங்கு முழுவதும் பரவி எரிந்ததால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக மாறியது. இதனால் அக்கிராம மக்கள் பீதிஅடைந்தனர்.
தகவலறிந்து வில்லியனூர், திருபுவனை, திருக்கனூர், சேதராப்பட்டு பகுதிகளைச் சேர்ந்த 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் அன்றைய தினம் இரவு முதல் மறுநாள் இரவுவரை 24 மணி நேரமாக தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.
இருப்பினும் பிளாஸ்டிக் கழிவுகளில் தொடர்ந்து தீ பரவி, அணையாமல் தொடர்ந்து எரிகிறது. கடந்த 11 நாட்களாக எரிந்து வரும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து கிளம்பும் புகையால் அங்குள்ள பொதுமக்களுக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதனை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவதியடைந்து வரும் கிராம மக்கள் இதனை கண்டித்து நேற்று புதுச்சேரி-திருக்கனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘புகை மூட்டம் மற்றும் தொடந்து எரியும் தீ காரணமாக கடும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் வாழமுடியாத நிலையில் இருக்கிறோம். உடனடியாக இதனை அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றனர்.
அங்கு வந்த போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.