

தேமுதிக மாநிலத் தொழிற்சங்கப் பேரவை பொருளாளரும், மதுரை வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான முஜிபூர் ரகுமான் இன்று உயிரிழந்தார்.
தேமுதிக மாநில நிர்வாகியான முஜிபூர் ரகுமான், மதுரை டிஆர்ஓ காலனி பகுதியில் வசித்து வந்தார். உடல்நிலை பாதித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு, மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு கரோனா தொற்று இருந்ததாகக் கூறப்படுகிறது.
விஜயகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்பே, கேப்டன் மன்றம் மூலம் பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தவர் முஜிபூர் ரகுமான். தேமுதிக 2005இல் ஆரம்பிக்கப்பட்டபோது, தன்னை அதில் இணைத்துக்கொண்டு பொதுக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார். செயற்குழு உறுப்பினர், தொழிற்சங்கப் பேரவை பொருளாளர் போன்ற பதவிகளை வகித்த அவர், 2011இல் திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 2016இல் மதுரை வடக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது, மதுரை மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்தார். பிரேமலதா போட்டியிட்ட தொகுதியிலும் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரப் பயணத்திலும் இருந்தார்.
விஜயகாந்த் மீது விசுவாசம் மிக்கவராக இருந்த முஜிபூர், தாய் கல்வி டிரஸ்ட் மூலம் ஏழை எளிய பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளைச் சொந்தச் செலவில் படிக்க வைத்தவர். மதுரையில் பிரியாணி கடையும் நடத்தினார். இவரது மரணம் மதுரை நகர் மட்டுமின்றி தேமுதிக மாநில நிர்வாகிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மதுரை முனிச்சாலை பகுதியிலுள்ள பள்ளி வாசலில் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் சில நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர்.