Last Updated : 05 May, 2021 11:36 AM

 

Published : 05 May 2021 11:36 AM
Last Updated : 05 May 2021 11:36 AM

தென் மாவட்டங்களில் அதீத நம்பிக்கையில் களமிறங்கி ஏமாந்த அமமுக

சட்டப்பேரவைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிகத் தொகுதிகளை வெல்வோம் என்று அதீத நம்பிக்கையில் களமிறங்கி அமமுக ஏமாந்துள்ளது.

தமிழகத்தில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக அணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, ஒவைஸி கட்சி, மருது சேனை சங்கம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று, சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தனர். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் அதிருப்தியில் இருக்கும் சிறுபான்மையினர் ஓட்டுக்களைப் பெறும் நோக்கில் இரு முஸ்லிம் அமைப்புகளுடனும், மதுரை மாவட்டத்தில் ஓரிரு தொகுதிகளை மனதில் வைத்து மருது சேனை என்ற அமைப்புடனும் அமமுக கூட்டணி அமைத்தது.

என்றாலும், அதிமுக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய தேமுதிகவும் வேறு வழியின்றி தினகரன் கட்சியில் கூட்டணி சேர்ந்தது. இதன் மூலம் சுமார் 160 தொகுதிகளில் அமமுகவும், 60 தொகுதிகளில் தேமுதிகவும், எஞ்சிய தொகுதியில் கூட்டணிக் கட்சிகளும் களம் கண்டன.

குறிப்பாக தென்மாவட்டத்தில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம் என, அமமுகவினர் நம்பிக் களமிறங்கினர். டிடிவி தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டி மற்றும் தங்களுக்குச் சாதகமான உசிலம்பட்டி, மேலூர், காரைக்குடி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், பரமக்குடி, மானாமதுரை உள்ளிட்ட சில தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவோம் என அமமுக நம்பியது.

ஆனால் எதுவும் நடக்கவில்லை. கோவில்பட்டியில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றார். 56,153 வாக்குகளைப் பெற்று டிவிவி தினகரன் 2ம் இடத்தை மட்டுமே பெற முடிந்தது. உறுதியாக எதிர்பார்த்த உசிலம்பட்டி, மேலூர், காரைக்குடி போன்ற தொகுதிகளிலும் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டனர். மேலும், தென்மாவட்ட அளவில் 50 தொகுதிகளில் 15 தொகுதிகளில் 3வது இடத்தைப் பிடித்தனர்.

இந்தத் தோல்வியைக் கண்டு அக்கட்சியினர் துவண்டுள்ளனர்.இதுகுறித்து அக்கட்சியினர் கூறும்போது, ''துரோகத்தை வீழ்த்துவோம், தீய சக்தியை விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் இந்தத் தேர்தலைச் சந்தித்தோம். குறிப்பாக கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவில்பட்டி பகுதியில் அதிகமான வார்டுகளில் வெற்றி பெற்றதால் எங்களது பொதுச் செயலாளரைக் கோவில்பட்டியில் களமிறக்கினோம். தேமுதிகவும் கூட்டணியில் இடம் பெற்றதால் தென் மாவட்டங்களில் கூடுதல் தொகுதிகளில் வெல்வோம் என எதிர்பார்த்தோம்.

அது நடக்கவில்லை என்றாலும், ஒருசில இடங்களில் அதிமுக வேட்பாளர்களின் தோல்விக்கு நாங்களே காரணமாக இருந்திருக்கிறோம். இத்தேர்தலில் மக்களின் ஆதரவு குறைவாக இருந்தாலும், அடுத்தடுத்த தேர்தலில் நிச்சயம் தமிழக மக்கள் எங்களை ஆதரிப்பார்கள். கட்சி வளர்ச்சி குறித்து அடுத்தகட்ட முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். பொதுச் செயலாளர் தமிழகம் முழுவதும் பயணம் செய்து, விரைவில் நிர்வாகிகளைச் சந்திக்கத் திட்டமிட்டு இருக்கிறார். அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிப்போம்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x