வெள்ள நிவாரணமாக புதுச்சேரிக்கு ரூ.452 கோடி வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் ரங்கசாமி நேரில் வலியுறுத்தல்

வெள்ள நிவாரணமாக புதுச்சேரிக்கு ரூ.452 கோடி வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் ரங்கசாமி நேரில் வலியுறுத்தல்
Updated on
2 min read

புதுச்சேரிக்கு மழை வெள்ள நிவாரணமாக மொத்தம் ரூ.452.45 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ரங்கசாமி நேரில் வலியுறுத்தினார்.

புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்தது. தொடர் கன மழையால் புதுவையில் 4 பேர் உயிரிழந்தனர். 7 ஆயிரம் ஹெக் டேர் விவசாயப் பயிர்கள் பாதிக்கப் பட்டன. தாழ்வான பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. சுமார் ஆயிரம் குடிசை வீடுகள் சேதமடைந்தன. புதுவையில் உள்ள பெரும்பாலான சாலைகள் மழை நீரால் பலத்த சேதமடைந்தது. இதை யடுத்து மத்தியக்குழு ஆய்வு செய்தது. மழை சேத நிவாரணமாக முதல்கட்டமாக ரூ.182.45 கோடியை வழங்குமாறு பிரதமருக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் கனமழை பெய்ததால் மழை வெள்ள பாதிப்பு கள் அதிகரித்தன. எனவே, மேலும் ரூ.200 கோடி மழை நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதினார். இதையடுத்து, ரூ.50 கோடியை இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு வழங்கியது. அதன் தொடர்ச்சி யாக, புதுவை, காரைக்காலில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரண தொகையாக தலா ரூ.4 ஆயிரம், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம், விவசாயப் பயிர்கள், ஆடு, மாடு, கோழி ஆகியவற்றுக்கு நிவாரணம் என ரூ.150 கோடி அளவுக்கு நிவாரண தொகையை முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். முதல் கட்டமாக, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நேற்று முதல் மழை நிவாரண தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரிக்கு கூடுதலாக மழை நிவாரணம் வழங் கக் கோரி முதல்வர் ரங்கசாமி டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, புதுச்சேரியில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விளக்கிக் கூறி கூடுதல் நிவார ணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது ராதாகிருஷ்ணன் எம்பி, பாலன் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக மத்திய அமைச்சர் கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, ஜேபி நட்டா ஆகியோரை முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார். அப்போது, நிதி சிக்கல், ஜிப்மர் கிளை மருத்துவக் கல்லூரி, ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘புதுச்சேரி அரசு ஏற்கெனவே கேட்டிருந்த ரூ.182.45 கோடி, ‘தானே’ புயல் பாதிப்பின்போது வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.70 கோடி, தொடர்ந்து பெய்த கனமழையால் கூடுதலாக ரூ.200 கோடி என மொத்தம் ரூ.452.45 கோடியை புதுச்சேரிக்கு நிவாரணமாக மத்திய அரசு தர வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்தார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in