

ஜிப்மரில் உயர் சிறப்பு சிகிச்சை வளாகம் உள்ளிட்ட கட்டிடங்கள், கரோனா சிகிச்சைக்காகப் படிப்படியாக மாற்றி அமைக்கப்படுகின்றன என்று புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (மே 04) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"கடந்த நான்கு முதல் ஐந்து வாரங்களில் புதுச்சேரியில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது. அதனால், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
அதிலும் முக்கியமாக ஆக்சிஜன் மற்றும் உயர் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. திடீரென தீவிரத் தொற்றால் நிலை தடுமாறி மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூச்சுத்திணறலுடன் வரும் கரோனா நோயாளிகள் மீது ஜிப்மர் நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னால் கரோனா நோயாளிகளுக்கான 229 படுக்கைகள், தற்போது 400 படுக்கைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கை 35-ல் இருந்து 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்காக மேலும் 75 படுக்கை வசதிகள் போர்க்கால அடிப்படையில் உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிதீவிர நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வரும் இந்நேரத்தில், இவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவப் பணியாளர்களின் தேவையும் மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால், ஜிப்மரில் பல்வேறு பிரிவுகளில் செயல்படும் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கரோனா சிறப்பு சிகிச்சைகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
கரோனா சிகிச்சைக்காக நிர்ணயிக்கப்பட்ட வளாகம் அல்லாது, மற்ற உயர் சிறப்பு சிகிச்சை வளாகம், மகளிர் மற்றும் குழந்தைகள் பிரிவு வளாகம், அவசர சிகிச்சை மற்றும் முதன்மை மருத்துவமனை வளாகம் ஆகிய கட்டிடங்களில் உள்ள படுக்கைகள், கரோனா சிகிச்சைக்காகப் படிப்படியாக மாற்றி அமைக்கப்படுகின்றன.
அதே நேரத்தில், அவசர மற்றும் கரோனா அல்லாத சேவைகள், இயன்றவரை சிறப்பாகச் செயல்பட ஜிப்மர் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. தீவிர சிகிச்சை தேவைப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்வதால், ஜிப்மரில் கூடுதல் படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்ட உடனேயே நிரம்பிவிடுகின்றன.
ஜிப்மர் நிறுவனம், தனது சிறப்பான சேவையைச் செய்துகொண்டிருக்கும் அதேவேளையில், இப்பகுதியில் உள்ள ஏனைய அனைத்து மருத்துவமனைகளும் மற்றும் சுகாதார நிறுவனங்களும் தங்களின் படுக்கை எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், கோவிட் தொற்று நோய் படுவேகமாக அதிகரித்துவரும் சூழ்நிலையை எதிர்கொள்ள அவசரமாக சிறப்பு படுக்கை வசதிகளை உருவாக்கி கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்".
இவ்வாறு புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.