Last Updated : 03 May, 2021 08:24 PM

 

Published : 03 May 2021 08:24 PM
Last Updated : 03 May 2021 08:24 PM

புதுச்சேரி ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி

புதுச்சேரி

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனைச் சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

புதுச்சேரி யூனியன் பிரதேச 15-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள், நேற்று வெளியாகின. இதில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 30 இடங்களில், ஆட்சி அமைப்பதற்கு 16 இடங்கள் தேவை. இத்தேர்தல் முடிவில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இக்கூட்டணியில் இடம் பெற்ற அதிமுக 5 இடங்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்துள்ளது.

எதிரணியில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும், 13 இடங்களில் போட்டியிட்ட திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணியில் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் தோல்வியடைந்தன.

6 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் இன்று ( மே. 3) புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர்களான நிர்மல்குமார் சுரானா, ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. ஆகியோர், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியைப் புதுச்சேரி திலாசுப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். தொடர்ந்து, புதுச்சேரியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, ரங்கசாமியுடன் 15 நிமிடங்கள் வரை ஆலோசனை நடத்தினர்.

இதனையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரி அப்பா பைத்தியசாமி கோயிலில் இன்று மாலை ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலர் என்.எஸ்.ஜெ.ஜெயபால் மற்றும் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் 10 பேரும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக, அக்கட்சியின் தலைவர் ரங்கசாமியை ஒருமனதாகத் தேர்வு செய்தனர். இதேபோல், பாஜக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் பாஜக பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அதில், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உறுதி செய்து, பாஜக எம்எல்ஏக்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் முடிவு செய்தனர். இதனால், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியானது.

இந்நிலையில் இன்று மாலை ரங்கசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், புதுச்சேரி துணைநிலை ஆளுநரைச் சந்தித்தனர். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அந்தச் சந்திப்பின்போது, ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான என்.ஆர் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் 16 பேரின் ஆதரவுடன் கூடிய கடிதத்தை வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

அக்கடிதத்தைப் பெற்ற ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ‘‘தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக ரங்கசாமியைத் தேர்வு செய்து, 10 என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 6 பாஜக எம்எல்ஏக்களும் என 16 எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டு ஆட்சி அமைக்கக் கோரி கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுநர் என்ற முறையில் கடிதத்தைப் பெற்றிருக்கிறேன். எப்போது பதவியேற்பதற்கு நேரம் கேட்கிறோர்களோ, அந்த நேரத்தில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் செய்து பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும். ரங்கசாமி நல்ல நேரம் பார்த்து தெரிவிப்பதாகக் கூறினார். அதனால் அவர்கள் சொன்ன தேதிக்கும், நேரத்துக்கும் நடைபெறும்’’ என்றார்.

ரங்கசாமி கூறும்போது, ‘‘தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் என்னை சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்வு செய்ததற்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். விரைவில் முதல்வர் பதவி ஏற்பு விழா நல்ல நாளில், நல்ல நேரத்தில் நடைபெறும்’’ என்றார்.

முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறும்போது, ‘‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிகப்படியான எம்எல்ஏக்களை மக்கள் தேர்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் கூட்டணிக் கட்சியினர் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். தேசிய ஜனநாயகத் தலைவர் ரங்கசாமியை முதல்வராக, எங்கள் தலைமையில் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்டு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளோம்’’ என்றார்.

இந்தச் சந்திப்பின்போது என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயபால் மற்றும் எம்எல்ஏக்கள், பாஜக பொறுப்பாளர்கள் நிர்மல்குமார் சுரானா, ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்களும் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x