Last Updated : 03 May, 2021 06:21 PM

 

Published : 03 May 2021 06:21 PM
Last Updated : 03 May 2021 06:21 PM

புதுச்சேரியில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத அதிமுக: மாநிலச் செயலாளர்கள் இருவரும் தோல்வி

புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக இத்தேர்தலில் தான் போட்டியிட்ட 5 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியைத் தழுவியது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர்கள் இருவரும் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர். இது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த அதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து 5 இடங்களில் தேர்தலைச் சந்தித்தன.

அதிமுக சார்பில் புதுச்சேரி கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன்- உப்பளம் தொகுதியிலும், மேற்கு மாநில அதிமுக செயலாளர் ஓம்சக்தி சேகர்- உருளையன்பேட்டை தொகுதியிலும், பாஸ்கர் - முதலியார்பேட்டை தொகுதியிலும், வையாபுரி மணிகண்டன் - முத்தியால்பேட்டை தொகுதியிலும், அசனா - காரைக்கால் தெற்கு தொகுதியிலும் போட்டியிட்டனர்.

உப்பளம் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி 13,433 வாக்குகள் பெற்றார். அன்பழகன் 8,653 வாக்குகள் பெற்று 4,780 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். முதலியார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் 15,151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஸ்கர் 10,972 வாக்குகள் பெற்று 4,179 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

முத்தியால்பேட்டை தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பிரகா‌‌ஷ்குமார் 8,778 வாக்குகள் பெற்றார். வையாபுரி மணிகண்டன் 7,844 வாக்குகள் பெற்று 934 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதேபோல் உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட மேற்கு மாநில அதிமுக செயலாளர் ஓம்சக்தி சேகர் கடந்த 3 சட்டப்பேரவைத் தேர்தல்களில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் தோல்வியடைந்தார். மீண்டும் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடத் தயாராகி வந்தார். ஆனால், அந்தத் தொகுதி கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.

ஜான்குமார் மகன் போட்டியிடுவதற்கு வசதியாக கட்சிக்குள்ளேயே தனக்கு சிலர் சதிவேலை செய்ததாக அப்போது ஓம்சக்தி சேகர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஆனாலும், வேறு வழியின்றி உருளையன்பேட்டை தொகுதியில் ஓம்சக்தி சேகர் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரான நேரு 9,580 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கோபால் 7,487 வாக்குகள் பெற்று 2-வது இடமும், 1,681 வாக்குகள் பெற்று ஓம்சக்தி சேகர் 3-வது இடத்துக்கும் தள்ளப்பட்டார்.

காரைக்கால் தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நாஜிம் 17,401 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அசனா 5,367 வாக்குகள் பெற்று 12,034 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதன் மூலம் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தது. இது அந்தக் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x