

காங்கிரஸ் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன். மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நான் தலைவணங்குகிறேன் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் போட்டியிட்டது. இதில் லாஸ்பேட்டை, மாஹே ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற இடங்களில் தோல்வியைச் சந்தித்தது. இது காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களைச் சோர்வடையச் செய்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் ஏற்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (மே.3) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2021 ஏப்-6ம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு முன்னாள் முதல்வராகப் பணியாற்றிய நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். புதுச்சேரி மாநில மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நான் தலைவணங்குகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலில் நாராயணசாமி போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது