

திமுக-வின் கட்டமைப்பை வலுப் படுத்துவதற்காக 34 ஆக இருந்த மாவட்ட நிர்வாகங்களை 65 மாவட்டங் களாக விரிவுபடுத்தி இருக்கிறது திமுக தலைமை. “இன்னும் சில அதிரடி மாற்றங்களுக்கு கட்சி தன்னை உட் படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்கி றார்கள் திமுக-வின் அடிமட்ட உழைப் பாளிகள்.
கட்சி மாவட்டங்களை 65 ஆக பிரித்திருப்பதன் மூலம் கோஷ்டிகளை கட்டுக்குள் வைக்கமுடியும் என தலைமை நம்புகிறது. தங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என தொண்டனும் இதை வரவேற்கிறான். ஆனால், இதுமட்டுமே கட்சியை தூக்கி நிறுத்திவிடாது. திமுக ஆட்சிக்கு வந்தால் இந்தத் துறைக்கு இவர்தான் அமைச்சராக வருவார் என்று தொண்டனுக்கு தெரிகிறது. அப்பா, பிள்ளை, அண்ணன், தம்பி, மகன், மருமகள் என குடும்பங்களைச் சுற்றியே கட்சி நகர்வதால், மற்றவர்கள் நமக்கு எங்கே வாய்ப்பு வரப்போகிறது என்று நினைத்து சோர்ந்து போய்விடுகின்றனர்.
ஆனால், அதிமுக-வில் யாருக்கு வேண்டுமானாலும் எந்தப் பதவியும் எப்போது வேண்டுமானாலும் தேடி வரலாம். அதேபோல் எவ்வளவு செல்வாக்கான நபராக இருந்தாலும் கட்சிக்கு பிடிக்காத காரியத்தைச் செய்தால் உடனடியாக கட்டம் கட்டப் படுவார்கள். இதனால்தான் அதிமுக -வினர் தவறு செய்யப் பயப்படுகி றார்கள்.
1996-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் கட்சிக்காக உழைத்தவர்களிடமிருந்து பதவியை பறிக்க வேண்டாம் என்பதால் அப்போது உட்கட்சித் தேர்தல்களை நடத்தாமல் ஒருதலைபட்சமாக ஆட் களை பதவிகளில் அமர்த்தினர். அந்தத் தவறுதான் இன்று வரை தொடர்கிறது.
இதுகுறித்து ‘தி இந்து’-விடம் தென் மாவட்ட மூத்த திமுக தொண்டர்கள் சிலர் கூறியதாவது: ‘‘தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்கள் திமுக-வில் எந்தப் பொறுப்புக்கும் வரமுடியாது. ஆனால், அதிமுக-வில் இருந்து வந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர், எ.வ.வேலு, ரகுபதி, கருப்பசாமி பாண்டியன் மதிமுக-விலிருந்து வந்த வேங்கடபதி எம்ஜிஆர் கழகத்தில் இருந்து வந்த ஜெகத்ரட்சகன் இவர்கள் எல்லாம் மத்திய, மாநில அமைச்சர் களாகவும் மாவட்டச் செயலாளர் களாகவும் மகுடம் சூட்டிக் கொள்ள முடிந்தது. செல்வகணபதி போன்ற வர்கள் மாநிலங்களவைக்கு போக முடிந்தது. இந்த “அவுட்சோர்சிங்” ஆட்கள் எல்லாம் திடீர் திடீர் என பதவியில் வந்து உட்காருவதைப் பார்க்கும்போது 14 ஆண்டுகள் வனவாசத்தில் ஜெயிலுக்கும் பெயி லுக்கும் அலைந்த எங்களைப் போன்றவர்களுக்கு கட்சியின் மீது அலுப்பும் சலிப்பும் வருகிறது. திமுக-வின் வரலாறு காணாத தோல்விக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
திமுக-வில் இப்போது யார் வேண்டு மானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; பேசலாம் என்கிற நிலை தான். இதையெல்லாம் சீரமைத்தால் மட்டுமே கட்சி மீண்டெழும்’’ என்று அந்தத் தொண்டர்கள் தெரிவித் தனர்.