

ஓய்வுபெற்ற டிஐஜி ஜான் நிக்கல்சன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் உயிரிழந்தார்.
தமிழகக் காவல்துறையில் குரூப்-1 அதிகாரியாகப் பணியில் இணைந்து டிஎஸ்பி, எஸ்.பி., டிஐஜி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஜான் நிக்கல்சன். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 2013ஆம் ஆண்டு டிஐஜியாகப் பணிபுரிந்தபோது விருப்ப ஓய்வு பெற்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2008ஆம் ஆண்டு எஸ்.பி.யாகப் பணியாற்றியவர். அதன் பிறகு திண்டுக்கல் சரக டிஐஜி ஆகவும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு காவல்துறை பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றவர்.
பின்னர் திமுகவில் இணைந்தார். திமுகவில் 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட விருப்ப மனு அளித்தார். தூத்துக்குடி, விருதுநகர், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதன் பின்னர் தீவிர அரசியலில் அவர் ஈடுபடவில்லை.
தமிழ்நாடு வாள் சண்டை சங்கத் தலைவராக அம்பாசமுத்திரத்தில் மக்கள் பணியிலும் ஈடுபட்டு வந்தார். சமீப வருடங்களாக எழும்பூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். அவரது சொந்த ஊர் கன்னியாகுமரி ஆகும்.