

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு திடீர் ஓட்டுநராக மாறிய இன்ஸ்பெக்டர், 10 கி.மீ. தூரம் ஜீப்பை ஓட்டிச் சென்று வீட்டில் இறக்கவிட்டு கவுரவப்படுத்திய சம்பவம் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடி வாத்தியார் வீதியைச் சேர்ந்தவர் முருகையன் (60). இவர் புதுச்சேரி காவல்துறையில் 1987-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். புதுச்சேரியின் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்த இவர் 2014-ம் ஆண்டு சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார்.
இறுதியாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றார். 34 ஆண்டுகள் கவால்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முருகையனுக்கு பிரிவு உபச்சாார விழா நேற்று (ஏப். 30) முத்தியால்பேட்டை காவல் நியைத்தில் நடைபெற்றது. நிலைய அதிகாரிகள், காவலர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த விழா முடிவடைந்ததும், யாரும் எதிர்பாராத விதமாக காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு திடீர் ஓட்டுநராக மாறி, அவரை 10 கி. மீ. தூரம் ஜீப்பை தானே ஓட்டிச் சென்று வீட்டில் இறக்கிவிட்டு கவுரப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, "காவல்துறையில் 34 ஆண்டுகள் சிறப்பான சேவை புரிந்துள்ளார். அனைவரது நன்மதிப்பையும் பெற்றுள்ளார். காவலர் முதல் காவல் அதிகாரிகள் வரை முருகையன் குறித்து உயர்வாகவே தெரிவித்தனர். வீட்டில் இருந்து உணவு கொண்டு வரும்போது கூட இரண்டு பேருக்கு சேர்த்தே கொண்டு வருவார். நேர்மையான நல்ல மனிதர்.
அனைவருடனும் கனிவுடனும், அரவணைப்புடனும் நடந்து கொள்வார். புதிதாக வருவபவர்களுக்கு பணிகளை சொல்லிக்கொடுப்பார். பெண் காவலர்களுக்கு தந்தை போன்று இருந்துள்ளார். இதனால் அவர் மீது திடீர் மரியாதை ஏற்பட்டது. மரியாதை நிமித்தமாகவே அவருக்கு ஜீப்பை ஓட்டிச் சென்றேன்" என்றார்.
முருகையன் கூறும்போது, "இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னை அழைத்துவந்து வீட்டில் விட்டுச் சென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பெருமைக்குரிய விஷயமும் கூட. எனது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்" என தெரிவித்தார்.