

யோகா, இயற்கை மருத்துவ முறைகளை கரோனா தடுப்பு முறைகளாகப் பயன்படுத்தலாம் எனப் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைளில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், தொழில் நிறுவனங்கள் தாராள மனதோடு அரசுக்கு உதவிகள் வழங்க வேண்டும் என்று அரசு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் முகக்கவசம், கிருமிநாசினி, வென்டிலேட்டர், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றைச் சுகாதாரத் துறைக்கு வழங்கி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இன்று (மே 1) புதுச்சேரி ராஜ்நிவாஸில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில், விழுப்புரம் தனியார் கல்விக் குழுமம் 10,000 கிருமிநாசினி புட்டிகளை சுகாதாரத் துறைக்கு வழங்கியது.
மேலும், புதுச்சேரி சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பாளர்கள் சங்கம் ரூ.50,000 மதிப்பிலான 25 கிலோ கபசுரக் குடிநீர் சூரணம், 36 லிட்டர் கிருமிநாசினி, 25 அடைப்புகள் கபசுரக் குடிநீர் கசாயம் வழங்கியது. சுகாதாரத் துறைச் செயலர் அருண அவற்றைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமௌலி , ஏ.பி. மகேஸ்வரி , மாநில சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீராமலு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘அரசுக்கு உதவ முன்வந்த நிறுவனங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல மேலும் நிறுவனங்கள் உதவி செய்ய முன்வர வேண்டும். புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மருத்துவக் குழுக்கள் வீடு வீடாகச் சென்று சிகிச்சை அளிப்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூ.500 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாளைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். தொற்றுக்கு ஆளாகாமல் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் கரோனா பாதிப்பைத் தடுக்க இயற்கை மருந்துகளைப் பரிந்துரை செய்து வருகிறது. அரசு மூலமாக ஒப்புதல் அளித்து மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கவும், சில இயற்கை மருத்துவர்கள், இந்திய மருத்துவ முறையைத் தனியாக மருத்துவமனை அமைத்து கரோனோ நாயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஒன்றிரண்டு மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் யோகா, இயற்கை மருத்துவ முறைகளை கரோனா தடுப்பு முறைகளாகப் பயன்படுத்தலாம். ரெம்டெசிவிர் மருந்து எல்லோருக்கும் தேவைப்படாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ரெம்டெசிவிர் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம். மருத்துவர்களும், தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும்.
இந்தியா முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மக்கள் தனிமனித இடைவெளியோடு பழக வேண்டும். கரோனா நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் முடிவுகள் வரும்வரை தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்.
பொதுமக்களின் விழிப்புணர்வு, கட்டுப்பாடுகளால் மட்டுமே கரோனா பரவலைத் தடுக்க முடியும். கரோனா ஒரு தொற்று, அந்த தொற்று பரவாமல் இருக்க நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொருவரின் மனதிலும் இருக்க வேண்டும்.
அரசின் கடமை, மருத்துவரின் கடமை என்று இல்லாமல், இது ஒவ்வொருவரின் கடமையாகும். தங்களையும், குடும்பத்தையும், சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்பவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த 6 லட்சம் தடுப்பூசி ஆர்டர் கொடுத்துள்ளோம். அது வந்தவுடன் தடுப்பூசி செலுத்தப்படும்.
இளைஞர்கள் அதற்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். ரெம்டெசிவிர், மருந்துகள், ஆக்ஸிஜன் ஆகியவை போதிய அளவு இருப்பு இருக்கிறது. ஆகவே, அரசுடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.’’
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.