

கரோனா இரண்டாவது அலை தமிழகத்திலும் வேகமாகப் பரவிவரும் நிலையில் தடுப்பூசியின் முக்கியத்துவம் மற்றும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்தும் தடுப்பூசி திருவிழா என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுஜி ஹெல்த் கேர், வாய்ஸ் டிரஸ்ட் பவுண்டேசன், மாவட்ட சுகாதார இணை இயக்குநர், நகர் நல அலுவலகம், மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் ராஜ்மகால் சில்க்ஸ் இணைந்து இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
தடுப்பூசி திருவிழா, விழிப்புணர்வு பிரச்சாரத்தை விளக்குத்தூண் பகுதியில் ஏப்., 26ல் மாநகரப் போக்குவரத்து துணை ஆணையர் சுகுமார் தொடங்கி வைத்தார்.
'வாய்ஸ்' டிரஸ்ட் தலைவர் முருகேசன் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்ந்து நடக்கிறது.
மதுரை மாவட்டத்தில் கள்ளந்திரி வட்டாரம், சக்கிமங்கலம் வட்டாரம் மற்றும் நகரில் சாத்தமங்கலம், விளக்குத்தூண் போன்ற பல்வேறு இடங்களிலும், கிராமங்களிலும் இந்த வேன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இடத்திலும் கரோனா பரவல் தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், விளக்கக் கையேடுகள் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம் செய்கின்றனர்.
ஆங்காங்கே ஆரம்ப சுகாதார நிலையம், நகர் நல மையங்களில் பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்கின்றனர்.
சக்கிமங்கலம் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, அப்பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார மையம் மூலம் சுமார் 70க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டது என, முருகேசன் தெரிவித்தார்.
இப்பிரச்சார வாகனம் இன்று (மே1) முதல் நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி உள்ளிட்ட மேற்கு வட்டாரப் பகுதியில் பல்வேறு கிராமங்களுக்கும் செல்கிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் இந்த பிரச்சாரப் பயணத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன் இன்று காலை தொடங்கி வைக்கிறார். வாய்ஸ் டிரஸ்ட் பவுண்டேசன் தலைவர் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.