மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்
Updated on
1 min read

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

மதுரை திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி அறக்கட்டளையின் தயா பொறியியல் கல்லூரி செயல்படுகிறது.

இந்தக் கல்லூரிக்காக இப்பகுதியில் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக மு.க. அழகிரி உள்ளிட்ட பலர் மீது நில அபகரிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மதுரை நில அபகரிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பிப்ரவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மு.க.அழகிரி மீது பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு குற்றப்பிரிவுகள் பொருந்தாது என நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து போலீஸ் தரப்பில் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணவள்ளி விசாரித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் சுற்றறிக்கை அடிப்படையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மு.க.அழகிரி மீதான இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in