

கரோனா பரிசோதனை செய்துகொள்ள மக்கள் முன்வர வேண்டுமெனவும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகுதான் மருத்துவமனைக்கே அவர்கள் வருவதாகவும் புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஏப்.29) வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
''புதுச்சேரியில் 9,727 பரிசோதனைகளைச் செய்துள்ளோம். அதில் 1,122 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர். 564 பேர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
நாம் பரிசோதனையைப் பலமடங்கு அதிகரித்துள்ளோம். மார்ச் 1-ம் தேதி வரை ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குப் பரிசோதனை செய்துள்ளோம். மக்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கிறது. அறிகுறி தென்பட்ட உடனேயே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இதுமட்டுமின்றி நடமாடும் பரிசோதனை வாகனங்களும் தயாராக இருக்கின்றன. கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்கும் வாகனங்களை நாம் அனுப்புகிறோம். நாங்கள் பரிசோதனை செய்யத் தயாராக இருக்கிறோம். நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் பேர் வரை பரிசோதனை செய்வதற்கான வசதிகளுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் உள்ளனர்.
எனவே, கரோனா பரிசோதனை செய்துகொள்ள மக்கள் முன்வர வேண்டும். உயிரிழப்பைப் பொறுத்தவரை, மருத்துவமனைக்குத் தாமதமாகக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டதுதான் முக்கியக் காரணம். அறிகுறி வந்தபிறகும் வீட்டிலேயே இருக்கின்றனர். மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகுதான் மருத்துவமனைக்கே வருகின்றனர். ஆகவே, அலட்சியப்படுத்த வேண்டாம்.
இன்று ரெம்டெசிவிர் மருந்துகள் ஆயிரம் வந்துள்ளன. ஏற்கெனவே ஆளுநர் முயற்சியினால் ஆயிரம் வந்தன. இரு தினங்களுக்கு முன்பு சிப்லாவில் இருந்து 100 வந்துள்ளன. ஆகவே, மக்கள் கவலைப்படத் தேவையில்லை. அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் அரசும், சுகாதாரத் துறையும் எடுத்து வருகிறது. மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும்''.
இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.