தேர்தல் வெற்றிக்குப் பட்டாசு வெடிப்பதைவிட பட்டினியில் இருப்பவர்களுக்கு உணவளியுங்கள்: புதுவை ஆளுநர் தமிழிசை

தேர்தல் வெற்றிக்குப் பட்டாசு வெடிப்பதைவிட பட்டினியில் இருப்பவர்களுக்கு உணவளியுங்கள்: புதுவை ஆளுநர் தமிழிசை
Updated on
1 min read

தேர்தல் வெற்றியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை விட, பட்டினியில் இருப்பவர்களுக்கு உணவளித்தால் அதுவே பெரிய வெற்றிக் கொண்டாட்டமாக இருக்கும் எனப் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் இன்று (ஏப்.29) கொண்டாடப்பட்டது. அரசு சார்பில் ஆளுநர் மாளிகை எதிரில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘தலைவர்களின் சிலைகளை அழகுபடுத்தப் பூச்செடிகள், மரக்கன்றுகள் நடுவதற்குப் பெரிய திட்டம் ஒன்றை ஏற்கெனவே தீட்டியுள்ளோம். தேர்தல் முடிவுகள் வந்தபின்னர் அது நடைமுறைப்படுத்தப்படும். கரோனாவைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து புதுச்சேரி சார்பில் 1 லட்சம் தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். இந்தத் தடுப்பூசி வந்தவுடன் அவர்களுக்குப் போடப்படும்.

ஏற்கெனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் போடவேண்டிய 1 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. நான் இளைஞர்களைக் கேட்டுக்கொள்வது, எல்லோரும் முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கான தடுப்பூசி அரசின் மூலம் போடப்படும். இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களின் பங்களிப்போடு கரோனாவை நிச்சயமாக வெல்லலாம்.

எந்த விதத்திலும் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் இருந்துவிடக் கூடாது என்பதால்தான் மே 3-ம் தேதி நள்ளிரவு வரை கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். வெற்றிக் கொண்டாட்டங்களைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை விட, பட்டினியில் இருப்பவர்களுக்கு உணவளித்தால் அதுவே ஒரு பெரிய வெற்றிக் கொண்டாட்டமாக இருக்கும்.

வெற்றி வேட்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் தாங்களும் முகக்கவசம் அணிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் கொடுத்துக் கொண்டாட வேண்டும். சாலையோர மக்களுக்கு உணவளிப்பதன் மூலம் உங்களது கொண்டாட்டங்களை வைத்துக்கொள்ள வேண்டும். மக்கள் கூடுவதுதான் பிரச்சினை. ஆகவே தேர்தல் முடிவுகள் வரும்போது அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.’’

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in