Published : 21 Jun 2014 10:00 AM
Last Updated : 21 Jun 2014 10:00 AM

இயலாதவர்களின் இனிய இல்லம் அமர் சேவா சங்கம்- சக்கர நாற்காலியில் இருந்தபடியே சாதித்த ராமகிருஷ்ணன்

‘நாங்கள் மேற்கொண்டிருக்கும் பயணத்தில் கடந்திருப்பது கொஞ்சம்தான். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது’ என்கிறார் ராமகிருஷ்ணன். இயலாதவர்களுக்கு தன்னலமற்ற தொண்டு செய்ய நினைப்பவர்கள் இவரது அமர் சேவா சங்கத்தை கட்டாயம் ஒருமுறை போய் பார்க்க வேண்டும்.

அமர் சேவா சங்கம் தொடங்கியதற்கு மூலகாரணமே எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்துதான். தென்காசி அருகேயுள்ள ஆய்க்குடியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். 1975-ல், கோவையில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த இவருக்கு தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும் என ஆவல் ஏற்பட்டது. அதற்காக, பெங்களூரில் நடந்த கப்பற்படை அதிகாரிகள் தேர்வில் கலந்து கொண்டார்.

உடல் தகுதித் தேர்வின்போது மரத்திலிருந்து குதித்தவருக்கு முதுகு தண்டுவடத்தில் பலமாக அடிபட்டது. பெங்களூரிலும் புனேயிலும் 20 மாதங்கள் சிகிச்சை அளித்தும் முழுமையாக குணமாகவில்லை. கழுத்துக்குக் கீழே செயலற்ற நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ராமகிருஷ்ணன்.

வீட்டுக்கு மூத்த பிள்ளை இப்படி முடமாகிப் போனதால் செய்வதறியாது திகைத்து நின்றது அந்தக் குடும்பம். பிறகு நடந்தவைகளை ராமகிருஷ்ணனே நம்மிடம் சொல்கிறார். வீட்டுக்கு வந்த பிறகுதான் தனிமையின் வெறுமையை உணர ஆரம்பித்தேன். என் நிலைமையை புரிந்துகொண்ட குடும்பத்தினர், ‘அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தால் ஆறுதலாக இருக்குமே’ என்றார்கள். தொடக்கத்தில் நான்கு குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்தேன். 2 வருடங்கள் போனபிறகு, இதையே ஒரு பள்ளிக்கூடமாக மாற்றலாமே என்று எனது தம்பிகள் யோசனை சொன்னார்கள்.

அதன்படி, 20 குழந்தைகளோடு கூரைக் கொட்டகையில் பாலர் பள்ளியை ஆரம்பித்தோம். அப்போதுதான், நம்மைப்போல இயலாத குழந்தைகளுக்கும் ஏதாவது செய்யலாமே என்று எண்ணம் தோன்றியது. அடிபட்டுக் கிடந்தபோது எனக்கு மனிதநேயத்துடன் சிகிச்சை அளித்தவர் டாக்டர் அமர்ஜித் சிங் சாகல். அவரது நினைவாகவே ‘அமர் சேவா சங்கம்’ தொடங்கினேன். தொண்டு அமைப்புகளும் நண்பர்களும் கைகொடுத்ததால் சங்கத்தின் செயல்பாடுகள் விரிவடைந்தது.

மும்பையில் உள்ள சுலோச்சனா என்ற அம்மையார் திரட்டிக் கொடுத்த நிதியை வைத்து நான்கு ஏக்கரில் நிலம் வாங்கினோம். ஏற்கெனவே நடத்திக் கொண்டிருந்த பள்ளியுடன் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கும் இல்லங்கள் அமைத்துக் கொடுத்து, அவர்களை அங்கேயே தங்கவைத்து படிக்க வைத்தோம். நாங்கள் தொடங்கிய பாலர் பள்ளி இப்போது உயர்நிலைப் பள்ளியாக வளர்ந்திருக்கிறது.

இங்கே மாற்றுத் திறனாளி குழந்தைகள் மட்டுமே 60 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கான செயற்கை உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் நாங்களே கவனித்துக் கொள்கிறோம். அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு டைப்பிங், புக் பைண்டிங், கம்ப்யூட்டர் பயிற்சி, சீருடை தைத்தல், கை வேலைகள் உள்ளிட்ட பயிற்சிகளையும் கொடுக்கிறோம்.

மாற்றுத் திறனாளி குழந்தைகளை மற்ற குழந்தைகளிலிருந்து பிரித்து வைக்காமல் எல்லாரையும் ஒன்றாக வைத்தே வகுப்புகளை நடத்துகிறோம். மூளை வளர்ச்சி குன்றிய, மனநலம் பாதிக்கப்பட்ட 70 குழந்தைகளுக்கும் இங்கே தனியான வகுப்புகள் உண்டு.

பக்கத்து ஊர்களைச் சேர்ந்த இந்தக் குழந்தைகளை தினமும் வேனில் அழைத்து வந்து பயிற்சி கொடுக்கிறோம். அதுமட்டுமில்லாமல், முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 17 குழந்தைகள் இப்போது எங்கள் கவனிப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய மருத்துவ சேவைகளை செய்வதுடன், தொழில் பயிற்சிகளையும் கொடுக்கிறோம்.இந்தப் பணிகளை தவிர்த்து சங்கத்துக்கு வெளியிலும் எங்களது சமுதாய சேவை தொடர்கிறது. இதற்காக 6 பஞ்சாயத்து யூனியன்களை தத்தெடுத்து அங்கெல்லாம் 600 சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி இருக்கிறோம்.

கிராமங்களில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை அவர்கள் இருக்குமிடத்திலோ தேவைப்பட்டால் சங்கத்துக்கு அழைத்து வந்தோ செய்து கொடுப்பதுதான் இந்தக் குழுக்களின் வேலை.

இங்கு படித்து முன்னேறிய குழந்தைகள் சிலர் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இப்போது பணி செய்கிறார்கள். இன்னும் சில குழந்தைகள் இங்கேயே சேவை செய்கிறார்கள். எங்களுடைய சேவைகளைப் பாராட்டி மத்திய, மாநில அரசுகள் விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தி இருக்கின்றன. நாங்கள் மேற்கொண்டிருக்கும் பயணத்தில் கடந்திருப்பது கொஞ்சம்தான். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது… தன்னடக்கத்துடன் சொன்னார் ராமகிருஷ்ணன்.

கழுத்துக்குக் கீழே செயல்பாடற்ற நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே இவ்வளவையும் சாதித்திருக்கிறார் ராமகிருஷ்ணன். இவரது விடா முயற்சியையும் தொண்டுள்ளத்தையும் பார்த்துவிட்டு, உள்ளூரைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் இவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இப்போது சங்கத்தில் லட்சுமியும் ஒரு சேவகர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x