கரோனா தடுப்பு; அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் மக்களுக்கு உதவ வேண்டும்: புதுவை ஆளுநர் தமிழிசை

கரோனா தடுப்பு; அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் மக்களுக்கு உதவ வேண்டும்: புதுவை ஆளுநர் தமிழிசை
Updated on
2 min read

கரோனா தடுப்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் மக்களுக்கு உதவி செய்யத் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தனியார் நிறுவனம் வழங்கிய வென்டிலேட்டர்களைப் புதுச்சேரி சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று(ஏப். 28) ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் 2 வென்டிலேட்டர்களை சுகாதாரத் துறையிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஆனந்த் பிரகாஷ் மகேஸ்வரி, சுகாதாரத் துறைச் செயலர் அருண் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர், ஆளுநர் தமிழிசை கூறியதாவது:

‘‘புதுச்சேரியில் ஆக்சிஜன், வென்டிலேட்டர், மருந்துகள் என அனைத்தும் தயாராக உள்ளன. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கரோனா தொற்று என்றவுடன் 80, 90 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

10,15 சதவீதம் பேர்தான் மருத்துவமனைக்கு வர வேண்டியிருக்கும். அதில் 2, 3 சதவீதம் பேருக்குதான் வென்டிலேட்டர் தேவை இருக்கும். மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அப்போது, அதிக மக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது. தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் மறுபடியும் கரோனா தொற்றுக்கு வழிவகை செய்துவிடக் கூடாது என்ற சமூக அக்கறை அனைவரிடமும் உள்ளது.

உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்களைக் கொடுத்துள்ளது. புதுச்சேரி, தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்போது கூட்டம் கூடி கரோனா பரவலுக்கு எந்த வாய்ப்பும் தந்துவிடக் கூடாது. அதற்காக சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் 30-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மே 3-ம் தேதி இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்போது என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோ, அதே கட்டுப்பாடுகள் மே 3-ம் தேதி வரை தொடரும். இதற்கு பொதுமக்களும் தயாராக இருக்க வேண்டும். ஆளுநர் மாளிகையில் கொடுத்த உத்தரவுகளைத்தான் ஆட்சியரும் கூறுகிறார். இதில் எந்தக் குழப்பமும் இல்லை. தெளிவாக அரசு மூலம் அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தனியார் நிறுவனங்கள் உதவி செய்ய முன்வருவது போல் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் மக்களுக்கு உதவி செய்ய தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். பல இடங்களில் இருந்து உதவிகளை எதிர்பார்க்கிறோம். நிச்சயமாக புதுச்சேரி மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். இப்போது மக்களுக்குச் சமூக அக்கறை உள்ளது.

கரோனாவைக் கட்டுப்படுத்த மக்களே கட்டுப்பாடோடு இருக்கிறார்கள். அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டம் கூட வேண்டாம் என்பதற்காக இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரியில் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் இருந்த கரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை ரூ.500 ஆகக் குறைத்துள்ளோம். அனைத்து இடங்களிலும் கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டம் அதிகமுள்ள இடங்களில் விரைவாகப் பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மலிவு விலை உணவை ரூ.10-ல் இருந்து ரூ.5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரிவுபடுத்தவும் யோசனை செய்து வருகிறோம்’’.

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in