மே 2-ல் வாக்கு எண்ணிக்கை: புதுச்சேரியில் முகவர்கள் 20 பேருக்கு கரோனா தொற்று

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு 4 மையங்களில் கரோனா பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை 20 முகவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப். 6-ம் தேதி நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2-ம் தேதி 5 மையங்களில் நடைபெறுகிறது.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி, தாகூர் அரசு கலைக் கல்லூரி ஆகிய 3 மையங்களில் நடைபெறுகிறது.

இதனிடையே, வாக்கு எண்ணிக்கையின்போது, மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொண்டு தொற்று இல்லை என்ற சான்றுடன் வர வேண்டும் என, தேர்தல் துறை அறிவுறுத்தியிருந்தது. மேலும், அவர்களுக்கான பரிசோதனை முகாம்கள் 7 மையங்களில் நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கான கரோனா பரிசோதனை சிறப்பு முகாம்கள் இன்று (ஏப். 28) தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

ரேபிட் டெஸ்ட் கிட் முறையில் பரிசோதனை செய்ததில், தற்போது வரை 20 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in