கரோனா தொற்று சமூகப் பரவல் ஆகாமல் இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

அன்சாரி துரைசாமி சிலைக்கு மாலை அணிவித்த ஆளுநர் தமிழிசை.
அன்சாரி துரைசாமி சிலைக்கு மாலை அணிவித்த ஆளுநர் தமிழிசை.
Updated on
2 min read

கரோனா தொற்று சமூகப் பரவல் ஆகாமல் இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் தியாகி அன்சாரி பெ.துரைசாமி நினைவு தினம் இன்று (ஏப். 27) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், மகாத்மா காந்தி சாலை மற்றும் சர்தார் வல்லபாய் படேல் சாலை சந்திப்பில் உள்ள அன்சாரி துரைசாமி சிலைக்கு ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கரோனா தொற்று காரணமாக அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கரோனாவைக் கட்டுப்படுத்த சில தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு மக்கள் ஒத்தழைப்பு தர வேண்டும்.

அறிகுறி ஏதேனும் இருப்பின் மக்கள் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தொற்று இருப்பது தெரிந்தால் பதற்றப்பட வேண்டாம். 80 சதவீதம் பேருக்கு வீட்டில் இருந்தே சிகிச்சை அளிக்க முடியும். மருத்துவமனையில் வேண்டிய அளவுக்கு படுக்கை வசதி இருக்கிறது.

ரெம்டெசிவிர் மருந்து எடுத்துக்கொண்டால் நோய் உடனே குணமாகிவிடும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. சிலர் ரெம்டெசிவிர் மருந்துக்காக நீண்ட தூரத்தில் இருந்து வந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதைச் செலுத்துவதற்கு சில வழிமுறைகள் உள்ளன.

இந்திய மருத்துவக் கழகம் ரெம்டெசிவிர் பயன்படுத்துவது சம்பந்தமாக மருத்துவர்களுக்கு என்று ஒரு வழிகாட்டு முறையை வெளியிட வேண்டும். மருத்துவமனையாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் பல்ஸ் ஆக்சிமீட்டர் வாங்கி வைத்துக்கொண்டு, அதில் 90 அல்லது 92-க்கு கீழ் பல்ஸ் வந்தால் மட்டுமே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறலாம்.

இல்லையேல் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவமனைக்கு வந்தால் கூட ஆக்சிஜன், அவசர கால மருந்துகள்தான் உடனடித் தேவையாகும். ரெம்டெசிவிர் தேவை என்ற ஒரு எண்ணம் மக்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். அதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு மருத்துவமனைகளிலும், அரசு மூலமாக தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் கொடுக்கப்படுகிறது.

இதனால் ரெம்டெசிவிர் மருந்துக்காக அலைய வேண்டிய தேவை கிடையாது. இப்போது ரெம்டெசிவிர் மருந்துக்குப் புதிய திட்டங்கள் வந்துள்ளன. அதற்கேற்ப இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்தியா முழுவதும் தொற்று பரவி வருகிறது. ஆனால், புதுச்சேரியில் பதற்றப்படும் அளவுக்கு கரோனா பரவவில்லை. அது பதற்றப்படும் அளவுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்கிறோம்.

எனவே, அனைவரும் கரோனா தொற்று சமூகப் பரவல் ஆகாமல் இருக்க ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முதலில் சாலையில் செல்லும்போது முகக்கவசம் அணிய அறிவுறுத்தினோம். இப்போது வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் என்கிறோம். வீட்டில் இருந்து யார் வெளியே சென்றுவிட்டு வந்தாலும் அவர்கள் மூலம் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, வீட்டிலேயே முகக்கவசம் அணியுங்கள், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். இடைவெளி விட்டு அமர்ந்து சாப்பிடுங்கள்.

அத்தியாவசியப் பொருட்கள் வாங்க, மருத்துவமனைக்குச் செல்ல, மருந்து வாங்க, தடுப்பூசி போட, பரிசோதனை செய்துகொள்ள வெளியே வருவதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், கூட்டம் கூட்டமாக வராதீர்கள் என்பதே எங்களது ஒரே கோரிக்கை. கூட்டம் கூடுவதைத் தடுத்தால் இவ்வளவு தடுப்பு நடவடிக்கைகள் தேவையில்லை".

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in