

கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரெம்டெசிவிர், ஆக்டெம்ரா உள்ளிட்ட மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. இந்த மருந்துகள் தனியார் மருத்துவமனைகளில் இருப்பு இல்லை.
மருத்துவரின் பரிந்துரை சீட்டை வைத்துக்கொண்டு நோயாளிகளின் உறவினர்கள் மருந்துகளுக்காக கடை கடையாக செல்கின்றனர். இந்த மருந்துகள் தேவைப்படுவோர், அரசிடம் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக மருத்துவ பணிகள் கழகம் அறிவித்தது. இதற்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருந்தகம் நேற்று அமைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை காண்பித்து மருந்துகளை பெற்றுச் செல்கின்றனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “ரெம்டெசிவிர், ஆக்டெம்ராபோன்ற மருந்து தேவைப்படுவோர் நோயாளியின் ஆதார், மருத்துவரின் பரிந்துரை சீட்டு, கரோனாவுக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று, சிடி ஸ்கேன் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் சென்று மருந்துக்கான பணத்தை அளித்து பெற்றுக் கொள்ளலாம். 104 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டு மருந்து விவரங்களை கேட்டு பெறலாம். தேவையின்றி மருந்து பெற யாரும் வர வேண்டாம். ஒரு நோயாளிக்கு தேவையான அளவு மட்டும் மருந்து வழங்கப்படும்” என்றனர்.