

தமிழகத்தில் கரோனாவின் 2வது அலை காரணமாக இரவு நேரம், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கைத் தொடர்ந்து, பல்வேறு புதிய கட்டுபாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான விதிமுறைக அமலுக்கு வந்த நிலையில், அந்தந்த காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்படும் மால்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கோயில்களை சிறப்புக்குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்க, மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன், காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள விசால டி மால், கே.கே. ரோட்டிலுள்ள மில்லினியம் மால், காளவாசல் பிக் பஜார் போன்ற மால்கள் ,வணிக வளாகங்கள் இன்று காலை முதல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.
அண்ணாநகர், காமராசர் சாலை, சிம்மக்கல், காளவாசல், ஆரப்பாளையம், நத்தம்ரோடு, புதூர் என, நகரின் பல்வேறு பகுதியிலுள்ள திரையரங்குகளும் மூடப்பட்டன.
இது தவிர பெரிய வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், சலூன் கடைகளும் மூடப்பட்டு இருக்கிறதா என, கண்காணித்தனர்.
உணவகம், டீக்கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள சிறப்பு குழுக்களுடன் காவல்துறையினரும் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும், மதுரை புறநகர்ப் பகுதியில் பெரியளவில் மால்கள் இன்றி, தியேட்டர்கள், வர்த்தக நிறுவனம், ஓட்டல்களும் சிறப்புக்குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
இது குறித்து போலீஸார் கூறுகையில், அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் செயல்படும் மால், தியேட்டர்கள், பெரிய வணிக வளாகங்களை காவல் ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் சுழற்சிமுறையில் கண்காணிக்கிறோம்.
முன்கூட்டியே மால், தியேட்டர் உரிமையாளர்களிடம் நேரிலும், போனிலும் கரோனா தடுப்புக்கான புதிய கட்டுபாடுகளை பின்பற்றவேண்டும் என, அறிவுறுத்தி உள்ளோம். கட்டுப்பாட்டு விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை காவல் துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.