

புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கரோனா 2-வது அலையின் தாக்கம் கடுமையாக உள்ளது. கடந்த சில நாட்களாக நாள்தோறும் புதிதாக 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் இறப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று புதிதாக 747 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (ஏப். 26) வெளியிட்டுள்ள தகவல்:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,451 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 647 பேருக்கும், காரைக்காலில் 39 பேருக்கும், ஏனாமில் 42 பேருக்கும், மாஹேவில் 19 பேருக்கும் என மொத்தம் 747 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் 1,402 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 6,108 பேர் என மொத்தம் 7,510 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
10 பேர் உயிரிழப்பு
தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த 9 பேர், ஏனாம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 758 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.40 சதவீதமாக நீடிக்கிறது.
இதனிடையே இன்று 515 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 758 (84.70 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் 7 லட்சத்து 70 ஆயிரத்து 209 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 6 லட்சத்து 92 ஆயிரத்து 936 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என 1 லட்சத்து 84 ஆயித்து 975 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.’’
இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.