

ஊரடங்கு என்று சொல்வதைவிட கரோனாவை நம் ஊரை விட்டு விரட்டுவதற்கான முயற்சி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று இரவு வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
‘‘புதுச்சேரியில் கரோனாவைக் கட்டுப்படுத்தவற்காக அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து தடுப்புப் பணிகளின் ஆலோசனைகள், விவாதங்கள், திட்டமிடல் இருந்ததால்தான் உங்களுடன் (மக்களுடன்) பேசக் காலதாமதம் ஏற்பட்டது.
அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பித்து இருக்கிறோம். இது ஊரடங்கு என்று சொல்வதைவிட கரோனாவை நம் ஊரைவிட்டு விரட்டுவதற்கான முயற்சி என்றுதான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கதவடைப்பு என்று சொல்வதைவிட கரோனா கதவடைப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் இது அடைப்பு என்று சொல்வதைவிட அரசு உங்களைப் பாதுகாப்பாக அடைகாக்கிறது என்று சொல்லலாம். ஆகவே, வீட்டிலிருக்கும் நாட்களைக் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம். குடும்பத்தினருடன் இருக்கும்போது கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வீட்டிலிருந்தாலும் முகக்கவசம் அணிந்து கொண்டும், தனிமனித இடைவெளி விட்டுதான் பேச வேண்டும். மிகவும் அவசியம் இருந்தால் ஒழிய, வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம். வீட்டுக்கு வேண்டியதையெல்லாம் ஒரே நாளில் வாங்கி வைத்துவிட்டால் தெருவில் கூட்டம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
சில நேரங்களில் இத்தகைய நடவடிக்கைகள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது என்று தெரிகிறது. ஆனால், வாழ்வு பத்திரமாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் உயிருடன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அதனால் இதனை அடைப்பு என்று எடுத்துக்கொள்ளாமல் அரசின் அடைகாப்பு என்று எடுத்துக்கொண்டு கரோனாவை ஊரைவிட்டு விரட்டுவோம். பாதுகாப்பாக இருப்போம்.’’
இவ்வாறு புதுவை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.