வீட்டு வாசலில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: திருப்பூர் மாநகராட்சி மீது குற்றச்சாட்டு
வீட்டு வாசலில் வாரக் கணக்கில் கழிவுநீர் தேங்கி நிற்பதாக, திருப்பூர் மாநகராட்சி மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி 32- வது வார்டுக்கு உட்பட்ட பாவடிக்கல் பகுதியில் 6 வீதிகள் உள்ளன. இங்கு சுமார் 300 வீடுகள் உள்ளன.இப்பகுதியிலுள்ள சாக்கடை கால்வாயை தூர்வாரி பல மாதங்களாகிறது. இதனால், கழிவு நீர் செல்லவழியின்றி, வீட்டு வாசல் முன்பு தேங்கி நிற்கிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் வீடுகளுக்குள்ளும் சாக்கடை நீர் புகுந்துவிடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகள், முதியவர் இருக்கும் வீடுகளில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "சாக்கடை அடைத்துகிடப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாக்கடை நீர் வாசல் முன்பு வாரக்கணக்கில் தேங்கி நிற்கிறது. அருகில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புள்ள இடங்களிலும் சாக்கடை நீர் தேங்குவதால் சிரமத்துக்கு ஆளாகிறோம். இப்பிரச்சினைக்கு தீர்வு காண, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் சுப்பிரமணியம் கூறும்போது,"இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
