

புதுச்சேரியில் ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்து தேவையான அளவு இருக்கின்றன என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று(ஏப். 23) வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது, ‘‘இந்தியா முழுவதும் கரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இச்சூழ்நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் புதுச்சேரியை பொருத்தவரையில் தேவையான ஆக்ஸிஜன் எல்லா மருத்துவமனைகளிலும் இருக்கிறது. மேலும் எல்லா படுக்கைகளிலும் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முனைப்பாக நடந்து வருகின்றன. ஆகவே ஆக்ஸிஜனை பொருத்தவரையில் நமக்கு எந்தவித ஐயப்பாடும் தேவையில்லை.
அதேபோல் ரெம்டெசிவர் மிக முக்கியமான மருந்து, இந்திய அளவில் இந்த மருந்து எங்கும் கிடைக்கவில்லை என்ற ஒரு தகவலும் பரவலாக பரவி வருகிறது. கரோனாவை பொருத்தவரை அகில இந்திய மருத்துவக் கழகத்தில் இருந்து வந்த தகவலின்படி, ரெம்டெசிவர் மருந்து கரோனா பாதித்த அனைவருக்கும் தேவைப்படாது. தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குதான் இது தேவைப்படுகிறது.
இந்த ரெம்டெசிவர் மருந்தும் புதுச்சேரியில் தேவையான அளவு இருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் இது உள்ளது. ஆகவே ரெம்டெசிவர் தான் உயிரைக்காக்கும் மருந்து என்று மக்கள் நினைக்கக்கூடாது. முகக்கசவம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது.
தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவைகள் தான் நம்முடைய உயிரை காக்கும் முக்கியமானவை. ஆகையால் பொதுமக்கள் இவற்றை கடைபிடித்து கரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஆக்ஸிஜன், ரெம்டெசிவர் மருந்து பற்றி மக்கள் கவலைக் கொள்ள வேண்டாம்’’இவ்வாறு மோகன்குமார் தெரிவித்துள்ளார்.