

மதுரை மேற்கு,கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான மதுரை மருத்துவக் கல்லூரியில் சீலிடப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன. மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், அதுவரை சுழற்சி முறையில் காவல் உதவி ஆணையர் தலைமையில் உள்ளூர் போலீஸார், துணை ராணுவப் படையினர் அடங்கிய குழுவினர் மூன்றடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தொகுதிக்குட்பட்ட கட்சி, சுயேச்சை வேட்பாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் சுழற்சி முறையில் அங்கிருந்து சிசிடிவி கேமராக்கள் மூலம் எல்இடி திரையில் 24 மணி நேரமும் அதிகாரிகளுடன் இணைந்து கண்காணிக்கின்றனர். நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் முகவர்கள் மூலமாகப் பாதுகாப்பு நடவடிக்கை விவரங்களை கேட்டறிகின்றனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ ஸ்ட்ராங் ’ அறை வரை நேற்று பகலில் சென்று வந்த இருவர் குறித்து, சிசிடிவி கேமரா மூலம் திமுக முகவர்கள் பார்த்தனர். அவர்கள் அங்குள்ள பதிவேட்டில் (லாக்-புத்தகம்) கையெழுத்திடாமல் இருந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தேர்தல் அதிகாரிகளிடம் திமுக முகவர்கள் புகார் செய்தனர். இதையடுத்து கட்சி நிர்வாகிகள், திமுக வழக்கறிஞர்கள் கருணாநிதி, லிங்கதுரை, மேக்சன் லோபோ, பாஜக வழக்கறிஞர்கள் ஜெயசிங், முத்துக்குமார்,கனகராஜ் ஆகியோர் அங்கு வந்தனர். தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும் புகார் செய் யப்பட்டது. வேட்பாளர்கள் கோ.தளபதி (திமுக), சின்னம்மாள் (திமுக), பூமிநாதன்(மதிமுக), சரவணன்(பாஜக), பாரதி கண்ணாம்மா (சுயே.) உள்ளிட்ட வேட்பாளர்களும், முகவர்களும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திரண்டனர். காவல் அதிகாரிகளும் அங்கு வந்தனர்.
இது குறித்து விசாரித்தபோது, பொதுப்பணித் துறை சார்பில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட எலக்ட்ரீசியன்கள் சுந்தர், கார்த்திக் ஆகியோர் ஸ்ட்ராங் அறை பகுதிக்குச் சென்று வந்தது தெரிய வந்தது. இவர்களுக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சீலிடப்பட்ட அறைக்கு செல்வதற்கு ஒரே வழி இருந்தபோதிலும், அவர்கள் பின்பகுதியிலுள்ள மற்றொரு வழியிலும் சென்று வந்ததும், கண்காணிப்புப் பதிவேட்டில் கையெழுத்திடாமல் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் ஆவணங்களை வேட்பாளர்கள் பார்வையிட்டனர்.
இது குறித்து கோ.தளபதி கூறுகையில்,‘‘ தேர்தல் ஆணைய அனுமதி அட்டை பெற்ற ஊழியர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் ஆகியோரிடம் தகவல் தெரிவித்த பிறகு சீலிடப்பட்ட அறைக்கு எலக்ட்ரீசியன்களை அனுப்பி இருக்க வேண்டும். தகவல் சொல்லாமல் சென்றது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம்’’ என் றார்.
அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘விதிமீறல் எதுவும் நடக்கவில்லை. பாதுகாப்பு குறைபாடு கிடையாது. இருப்பினும் வேட்பாளர்கள் சந்தேகம் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.