

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான அளவு படுக்கை வசதிகள் உள்ளது எனவும், கரோனா தொற்று அதிகமுள்ள இடங்களை தனிமைப்படுத்துவது என்று முடிவு செய்துள்ளோம் எனவும், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி திருவிழாவின் ஒரு பகுதியாக, பெரிய மார்க்கெட்டில் கரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம் இன்று (ஏப். 18) நடைபெற்றது. இம்முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து, வியாபாரிகள் மற்றும் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், ஆளுநரின் ஆலோசகர் ஆனந்த் பிரகாஷ் மகேஸ்வரி, ஆட்சியர் பூர்வா கார்க், மாநில சுகாதார இயக்கக இயக்குநர் ஸ்ரீராமுலு மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"இன்றைய தினத்தில் இருந்து மக்கள் எங்கெல்லாம் அதிகமாக கூடுகிறார்களோ, அங்கெல்லாம் தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. 100 பேருக்கு மேல் வேலை செய்யும் எல்லா இடங்களிலும் தடுப்பூசி, கரோனா பரிசோதனை முகாம் நடத்த உள்ளோம்.
கரோனா தொற்று அதிகமுள்ள இடங்களை தனிமைப்படுத்தவது என்று முடிவு செய்துள்ளோம். ஏனென்றால், அந்த பகுதியை தனிமைப்படுத்தவில்லை என்றால், அங்கிருந்து மக்கள் வெளியே வரும்போது நோய் தொற்று வர வாய்ப்புள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பூசி பற்றிய கவலை வேண்டாம். தடுப்பூசியால் எந்த பக்க விளைவும், உயிருக்கு ஆபத்தும் கிடையாது. ஆகவே, அரசு ஏற்படுத்தியுள்ள அனைத்து வசதிகளையும் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு படுக்கை வசதி உள்ளது. அதேபோல், தனியார் மருத்துவமனைகளிலும் போதுமான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்து வைத்துள்ளோம். ஜிப்மர், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, இஎஸ்ஐ மருத்துவமனையில் வேண்டிய அளவுக்கு படுக்கைகள் உள்ளன. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதியில்லாதவர்களுக்காக கோவிட் பாதுகாப்பு மையங்கள் திறக்கப்படவுள்ளன. 24 மணிநேரமும் மக்கள் எங்களிடம் சந்தேகங்களை கேட்பதற்காக 104 என்ற எண் வைக்கப்பட்டுள்ளது. அது அதிகப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.
தற்போதுள்ள கரோனா வைரஸ் காற்றில் கூட பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். எனவே, உணவகங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம். இதனால் கரோனா தொற்று கட்டுப்படும் என்று நினைக்கிறேன். ஆனால், எல்லா இடங்களிலும் தொற்று பரவி வருகிறது. பல மாநிலங்களில் மிக அதிகமாக பரவி வருகிறது. விஞ்ஞான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கரோனாவை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும்.
மார்க்கெட்டில் உள்ள பெண்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியுடன் வேலை செய்கின்றனர். அவர்களிடம் நான் கேள்வி கேட்பதற்கு முன்பே முகக்கவசம் போட்டிருக்கிறேன், தடுப்பூசி போட்டுள்ளேன் என சொல்கிறார்கள். இத்தகைய விழிப்புணர்வு புதுச்சேரியில் வந்துள்ளது. கரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நொடிக்கு நொடி திட்டமிட்டு கொண்டிருக்கிறோம். அதனால் அரசு அதிகாரிகள் களத்தில் இல்லை என்று கூறுவதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்".
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.