அரசு அதிகாரிகள் களத்தில் தான் இருக்கிறார்கள்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு ஆளுநர் தமிழிசை பதில்

தமிழிசை: கோப்புப்படம்
தமிழிசை: கோப்புப்படம்
Updated on
2 min read

புதுச்சேரியில் மருத்துவ அதிகாரிகள், கட்டமைப்புகள் இருந்தாலும், அரசு அதிகாரிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்கிறார்களே தவிர களத்தில் இறங்கி பணிபுரிவதில்லை என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக, புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் கரோனா தடுப்பூசி முகாமை இன்று (ஏப். 18)தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"அனைவருமே களத்தில் தான் இருக்கிறார்கள். ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை அரசு அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு எவ்வளவு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், எங்கு அதிக பாதிப்பு இருக்கிறது, கூட்டமுள்ள இடத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அதிகாரிகள் களத்தில் இல்லை, திட்டமிடவில்லை என்று கூற வேண்டாம்.

ரெம்டெசிவர் மருந்து கிடைக்காதபோது கூட தெலங்கானாவில் இருந்து வாங்கி வந்து வைத்துள்ளேன். மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, அனைத்து மருந்து நிறுவனங்களும் ரெம்டெசிவர் மருந்தின் விலையை குறைத்திருக்கிறது. இதற்காக மத்திய அரசை பாராட்டுகிறேன். அதேபோல், ஆக்சிஜனுக்கு பிரச்சினை கிடையாது. தொடர்ந்து காணொலி காட்சி மூலமாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் நிர்வாகிகளிடம் பேசுகிறோம். ஐசிஎம்ஆர் உயரதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் பேசும்போது எங்களுடைய திட்டங்களை பார்த்துவிட்டு, மேலும் நடவடிக்கை எதுவுமில்லை. எல்லா நடவடிக்கையும் எடுத்துள்ளதாக தெரிவித்தது.

அரசு வேண்டியதை எல்லாம் செய்கிறது. எனவே, யார் வேண்டுமானாலும் ஆலோசனை கூறலாம். தயவு செய்து குற்றம் கண்டுபிடிப்பதை விட இதை செய்யுங்கள் என்று ஆலோசனை கூறினால், அதனை திறந்த மனதோடு எடுத்துக் கொண்டு மக்களுக்காக அதனை நடைமுறைப்படுத்த தயாராக இருக்கிறோம். அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக சிலர் கூறியிருக்கிறார்கள். தயவு செய்து அப்படிப்பட்ட கருத்துகளை பரப்ப வேண்டாம். ரெம்டெசிவர், உயிர்காக்கும் மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் என அனைத்தும் இருக்கிறது.

அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 300 படுக்கைககள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று அரசும், அரசு நிர்வாகிகளும், ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள். அரசு அதிகாரிகள் களத்தில் இல்லை என சொல்கிறீர்கள். ஆனால், தமிழ்ப்புத்தாண்டை கூட கொண்டாடாமல் 100 இடங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் களத்தில் இருந்து பணியாற்றினார்கள். கரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் உள்ளூர் ஊரடங்கை நடைமுறைப்படுத்தவும், இல்லையென்றால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று பாதிப்பு அதிகமிருந்தால் அதனை கட்டுப்படுத்த முயற்சி செய்யப்படும்.

ஆனால், அவர்களது வாழ்வு முடங்கி போய்விடக் கூடாது. அனைத்தையும் அடைத்துவிட்டு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறுலாம். ஆனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் எச்சரிக்கை மட்டும் விடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கரோனாவை பற்றி தெரியாததால் பொது முடக்கத்தை பிரதமர் அறிவித்தார். இதனால் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இப்போது முகக்கவசம் போட்டால் நோயை தடுக்க முடியும். தடுப்பூசி, மருந்து இருக்கிறது. இவையெல்லாம் இருக்கும்போது ஊரடங்கு என்ற அளவுக்கு நாம் போகாமல் வைத்துக் கொள்ள வேண்டும். இதையும் தாண்டி தொற்று பாதிப்பு இருந்தால் ஊரடங்கு குறித்து சிந்திக்கலாம்".

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in