

மக்களுக்கு புரியும்படியான விஞ்ஞானத்தைச் சொன்னவர் தந்தை பெரியார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 42-வது ஆண்டு நினைவு நாள் சிறப்புக்கூட்டம் நேற்று முன்தினம் பெரியார் திடலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கி.வீரமணி பேசியதாவது:
சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண்டுமானால் சாதி ஒழிய வேண்டுமென்று களத்தில் நின்று கடைசிவரை போராடியவர் பெரியார். இன்றைக்கு பெரியாரின் கருத்துகள் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. மனிதனை மையப்படுத்தி தனது செயல்திட்டங்களை வடிவமைத்தவர் பெரியார். அவர் தனிமனிதரல்ல, அவர் ஒரு தத்துவம், கோட்பாடு. தனது இயக்கத்துக்கு ‘சுயமரியாதை’ என்று பெயர் வைத்தவர். அதற்கு ஈடான பொருள் பொதிந்த சொல் வேறு கிடையாது என்றே சொல்வேன்.
பகுத்தறிவுள்ள மனிதனைப் பார்த்து, ‘நீ சுய மாய் சிந்தித்து செயல்படு’ என்றார் பெரியார். ‘நான் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதே’ என்றும் சொன்னவர். அனைத்து மக்களுக்கும் புரியும்படியான விஞ்ஞானத்தை எடுத்துச் சொன்ன பெருமைக்குரியவர் தந்தை பெரியார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், பேராசிரியர் சு.வீரபாண்டியன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், வழக்கறிஞர் சு.குமாரதேவன், வீ.அன்புராஜ், பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஆகியோர் பங்கேற்று பேசினர்.