

தடுப்பூசி போடுவது இடைக்காலம் தான், ஒருவருடத்துக்கு அந்த வீரியம் இருக்கும், அதற்கு பிறகு கரோனா வருமா, வராதா என்பதை கூற முடியாது என, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று உருமாறி மிக வேகமாக பரவி வருகிறது. உமிழ்நீர் பரிசோதனையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். நகரம் மற்றும் கிராமங்களில் பல மையங்களில் உமிழ்நீர் பரிசோதனையை தொடர்ந்து செய்ய வேண்டும்.
உருமாறிய கரோனா வேகமாக பரவ காரணம், மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்வதும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததும் தான். கடைகள், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடியதால் அதிகளவில் பரவுகிறது. கரோனா தொற்று பாதித்தவர்கள் வெளியே சொல்லாமல், தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.
இப்படி செய்வதன் மூலம் அவர்களின் நுரையீரல் சுமார் 60, 70 சதவீதம் பாதிக்கப்பட்ட பிறகு மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அந்த சமையத்தில் மருத்துவர்கள் அவர்களை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. புதுச்சேரி மாநில மக்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
புதுச்சேரி மருத்துவத்துறையின் அறிக்கையின்படி 2,400 படுக்கைகள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கி இருப்பதாக கூறுகிறார்கள். ஆகவே, படுக்கைகளுக்கு எந்தவிதமான சிரமமும் இல்லை. காங்கிரஸ் - திமுக ஆட்சியில் ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 300 படுக்கைகளை நாங்கள் உருவாக்கி, அதற்கான அனைத்து செலவையும் மாநில அரசே ஏற்றுக்கொண்டது.
அதே நிலையை இப்போது செய்ய வேண்டும். வீடு, வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், ஏஎம்என்களை உடனடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தான் கரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அது மாற்றப்பட்டு 18 வயதில் இருந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். 12 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும். இப்போது 1 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. தடுப்பூசியினால் எந்தவிதமான பாதிப்பும் மக்களுக்கு இல்லை என்ற உணர்வை உருவாக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
கரோனா வரும் வரை யாரும் காத்திருக்க வேண்டியதில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்தவிதமான நிபந்தனையும் கிடையாது. ஆதார், பான், வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றைக் கொண்டு வந்து தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். வயது வரம்பு வைப்பதன் காரணமாக இளம் வயதினர் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, வயது வரம்பை வைத்தது தவறு.
நமது நாட்டில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய மருந்துகள் இருக்கின்றன. ஸ்புட்னிக்-5 என்ற மருந்து வர இருக்கிறது. எந்த அளவுக்கு நமக்கு மருந்து தேவைப்படுகிறதோ அவற்றை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மத்தியில் உள்ள மோடி அரசுக்கு இருக்கிறது.
ஆனால், துரதிருஷ்டவசமாக பிரதமர் மாநில முதல்வர்கள், மருத்துவத்துறை பொறுப்பாளர்களுடன் கூட்டம் நடத்தி, அதில் எந்த முடிவையும் எடுக்காமல் நாட்டு மக்களுக்கு வழிகாட்ட முடியாத நிலையில் இருந்து வருவது வருத்தத்துகுரியது. எல்லா மாநிலங்களிலும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்கள்.
இப்போது பல மாநிலங்களில் பிரதமர் காணொலி காட்சி மூலம் பேசும்போது இந்த நாட்டில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்க வேண்டிய அவசியமில்லை. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் போதும் என்று கூறுகிறார். ஆனால், பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி இருக்கின்றன.
மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பால் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. குஜராத்தில் ஆக்சிஜன் இல்லாமல் பலர் உயிரிழக்கின்றனர். மருத்துவமனைகளில் தங்க படுக்கை கிடைக்கவில்லை. தகுந்த மருத்துவர்கள் இல்லை. இறந்தவர்கள் உடல்களை எரிப்பதற்கு கூட இடமில்லாத நிலை குஜராத்தில் இருக்கிறது.
பல மாநிலங்களில் விதிமுறைகளை கடைபிடிக்காத காரணத்தால் இந்தியாவில் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய அளவில் கரோனா பரவுகிறது. இதற்கு மத்திய அரசு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். மாநில அரசுகள் ஒத்துழைக்கின்றன. ஆனால், மத்திய அரசு சரியான வழியை மாநிலங்களுக்கு காட்ட வேண்டும். தடுப்பூசி போடுவது இடைக்காலம் தான்.
ஒருவருடத்துக்கு அந்த வீரியம் இருக்கும். அதற்கு பிறகு கரோனா வருமா, வராதா என்பதை கூற முடியாது. புதுச்சேரியில் மருத்துவ அதிகாரிகள், கட்டமைப்புகள் இருந்தாலும், அரசு அதிகாரிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்கிறார்களே தவிர களத்தில் இறங்கி பணிபுரிவதில்லை. மக்களுக்கு விழிப்புணர்வும், அவர்களின் ஒத்துழைப்பும் இருந்தால் தான் கரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
பொருளாதாரம், வியாபாரம் பாதிக்கப்படக் கூடாது. தொழிற்சாலைகள் இயங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும். கரோனாவை ஒழிக்க மிகப்பெரிய அளவில் மாநில அரசுகள் ஒத்துழைத்தாலும், மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் கட்டுப்படுத்த முடியாது.
கரோனா தடுப்பூசியை தட்டுப்பாடு இல்லாமல் எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழங்க வேண்டும். சிறிய மாநிலமான புதுச்சேரியில் கரோனாவை கட்டுப்படுத்துவது சிரமமானது அல்ல. காங்கிரஸ் ஆட்சியில் கட்சி பாகுபாடின்றி முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் களத்தில் இருந்து பணிபுரிந்தோம். இப்போது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் உற்பத்தி கிடைக்கவில்லை. சாதாரண கூலித்தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை சரிசெய்யவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.