பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரியில் புதிய உச்சம்; 715 பேருக்கு கரோனா: 3 பேர் உயிரிழப்பு

Published on

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 715 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 4,000-ஐத் தாண்டியுள்ளது.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (ஏப். 17) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 4,748 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 567 பேருக்கும், காரைக்காலில் 88 பேருக்கும், ஏனாமில் 35 பேருக்கும், மாஹேவில் 25 பேருக்கும் என, மொத்தம் 715 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி அதிகபட்சமாக 688 பேர் பாதிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. இதனால் மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது. இதில், தற்போது மருத்துவமனைகளில் 721 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 3,369 பேர் என மொத்தம் 4,090 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேர், காரைக்காலைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 705 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.50 சதவீதமாக உள்ளது.

இன்று 198 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 313 (89.82 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 7 லட்சத்து 24 ஆயிரத்து 132 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 6 லட்சத்து 59 ஆயிரத்து 76 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 29 ஆயிரத்து 952 சுகாதாரப் பணியாளர்கள், 17 ஆயிரத்து 672 முன்களப் பணியாளர்கள், 1 லட்சத்து 664 பொதுமக்கள் என 1 லட்சத்து 48 ஆயிரத்து 288 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களில் 4,159 பேர் பாதிப்பு:

தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்றின் காரணமாக, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 4,159 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அதுமட்டுமின்றி, 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகவே, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும், 45 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in