

புதுச்சேரியில் புதிதாக 531 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், 3 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கையும் 700-ஐத் தாண்டியுள்ளது.
இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (ஏப். 16) வெளியிட்டுள்ள தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 4,714 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-366, காரைக்கால்-95, ஏனாம்-48, மாஹே-22 என மொத்தம் 531 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 393 ஆக அதிகரித்துள்ளது.
இதில், தற்போது புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் 191 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 288 பேரும், கோவிட் கேர் சென்டரில் 61 பேரும், காரைக்காலில் மருத்துவமனைகளில் 61 பேரும், ஏனாமில் மருத்துவமனைகளில் 66 பேரும், மாஹேவில் மருத்துவமனைகளில் 11 பேரும் என மருத்துவமனைகளில் 678 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் புதுச்சேரியில் 2,061 பேரும், காரைக்காலில் 603 பேரும், ஏனாமில் 114 பேரும், மாஹேவில் 120 பேரும் என 2,898 பேர் என மொத்தமாக மாநிலம் முழுவதும் 3,576 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேர், காரைக்காலைச் சேர்ந்த ஒருவர் என, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 702 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.51 சதவீதமாக உள்ளது.
இன்று 220 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 115 (90.78 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 7 லட்சத்து 19 ஆயிரத்து 418 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 6 லட்சத்து 55 ஆயிரத்து 565 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 29 ஆயிரத்து 726 சுகாதாரப் பணியாளர்கள், 17 ஆயிரத்து 253 முன்களப் பணியாளர்கள், 93 ஆயிரத்து 232 பொதுமக்கள் என 1 லட்சத்து 40 ஆயிரத்து 211 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.