

பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தை திடீரென இறந்ததையடுத்து, அப்பெண் குழந்தையை அதன் பெற்றோர் கொலை செய்து புதைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் சடலத்தை மருத்துவர்கள் மீட்டுப் பிரேதப் பரிசோதனை செய்து மீண்டும் புதைத்தனர்.
நாமக்கல் அருகே எருமப்பட்டி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சூர்யா. இவருக்கும் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த கஸ்தூரி (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கஸ்தூரி மீண்டும் கர்ப்பமடைந்தார்.
இதையடுத்து அவர் கடந்த 4-ம் தேதி பிரசவத்திற்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறு நாளான 5-ம் தேதி அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இச்சூழலில் அவர் மருத்துவமனையில் இருந்து முறையாக டிஸ்சார்ஜ் ஆகாமல் குழந்தையை எடுத்துக்கொண்டு பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று 3-வதாகப் பிறந்த பெண் குழந்தை திடீரென இறந்தது. இதையடுத்து அக்குழந்தையின் சடலம் அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்துத் தகவல் அறிந்த எருமப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் லதா, கஸ்தூரியின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில் பெண் குழந்தையை அவர்கள் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவ அலுவலர் லதா, எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து சேந்தமங்கலம் வட்டாட்சியர் சுரேஷ் முன்னிலையில் காவல்துறையினர் பாதுகாப்புடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் சடலத்தை மீட்டு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர். மேலும், சம்பவம் தொடர்பாகத் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.