

கிருஷ்ணகிரி அருகே சுவரில் வரைந்திருந்த அம்பேத்கர், பெரியார் ஓவியங்களை அவமதித்தவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே மோட்டூர் கிராமத்தில் அம்பேத்கர் காலனி உள்ளது. இங்கு உள்ள மின்மோட்டார் அறையின் சுவரில் அம்பேத்கர், பெரியார் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், ஏப்.14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, சுவரில் உள்ள ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டப்படுவது வழக்கம்.
அதன்படி, நேற்று (ஏப்.12) ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஏப். 13) அதிகாலை மர்ம நபர்கள் சிலர், சுவரில் வரையப்பட்டிருந்த அம்பேத்கர், பெரியார் ஓவியங்களை அவமதித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், ஓவியங்களை அவமதித்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.