காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய திமுகவினர் 20 பேர் மீது வழக்கு

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய திமுகவினர் 20 பேர் மீது வழக்கு
Updated on
1 min read

சிங்காரப்பேட்டை அருகே காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய திமுகவைச் சேர்ந்த 20 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஒருவரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கொட்டுக்காரன்பட்டி கிராமத்தில் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளதாக, சிங்காரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், தலைமைக் காவலர் ராஜா, போலீஸார் புஷ்பராஜ், பச்சையப்பன் ஆகியோர் கிராமத்துக்குச் சென்றனர்.

அங்கு நடராஜன் என்பவரது வீட்டின் அருகே சிலர் கும்பலாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீஸார், என்ன தகராறு என கேட்டு, அனைவரும் கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த திமுகவைச் சேர்ந்த கற்பூரசுந்தர பாண்டியன் என்பவர், காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தவர் பிரச்சினை குறித்து தெரிவிக்கவில்லையா எனக் கூறி, 144 தடை உத்தரவு அமலில் உள்ளதா எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

அப்போது போலீஸாருக்கும், கற்பூரசுந்தர பாண்டியன் மற்றும் அவருடன் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கற்பூரசுந்தர பாண்டியன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், ஒன்றியக் குழு உறுப்பினருமான குமரேசன், கற்பூரசுந்தர பாண்டியனின் அண்ணன் மகன் மோகன் மற்றும் சிலர் சேர்ந்து எஸ்ஐ கார்த்திகேயனை தாக்கினர். அதில் அவருக்கு கன்னத்தில் காயமும், காது, கழுத்து மற்றும் நெஞ்சில் உள்காயம் ஏற்பட்டது. மேலும், அங்கு நடந்த நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்த போலீஸாரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு, அங்கிருந்தவர்கள் போலீஸாரை துரத்தினர்.

இந்த தகவலை அறிந்த மேலும் சில போலீஸார் ஜீப்பில் அங்கு வந்தனர். அவர்களைக் கண்டதும், அங்கிருந்தவர்கள் செல்போனுடன் தப்பி ஓடிவிட்டனர். மேலும், காயம் அடைந்த எஸ்ஐயை, உடனிருந்த போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட எஸ்ஐ கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் 5 பிரிவுகளில் திமுகவைச் சேர்ந்த கற்பூரசுந்தர பாண்டியன், மோகன், குமரேசன் உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே நேற்று மாலை இவ்வழக்கில் கற்பூரசுந்தர பாண்டியனை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in