கோவையில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர், ஊழியர்கள் மீது தாக்குதல்; காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி புகார்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
Updated on
1 min read

கோவையில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர், ஊழியர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்கு அருகே, சாஸ்திரி ரோட்டைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான உணவகம் உள்ளது. இங்கு நேற்று (ஏப்.11) இரவு 10.15 மணிக்கு ஓசூரைச் சேர்ந்த 5 பேர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த காட்டூர் சட்டம் - ஒழுங்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) முத்து என்பவர், கடையை ஏன் இன்னும் திறந்து வைத்து இருக்கிறாய் எனக் கூறி உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் உணவகத்தில் இருந்த ஊழியர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், உணவகத்தில் இருந்த பொருட்களையும் அடித்துச் சேதப்படுத்தி உள்ளார்.

இதில், படுகாயமடைந்த வாடிக்கையாளர் ஓசுரைச் சேர்ந்த ஜெயலட்சுமி மற்றும் கதிர்வேல், ஆறுமுகம், சதீஷ்குமார் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உதவி ஆய்வாளர் முத்து, தாக்குதலில் ஈடுபடும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சாத்தான்குளம் சம்பவத்தைப் போல் அமைந்துள்ள உதவி ஆய்வாளரின் இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் முத்துவையும், இவரது செயல்பாடுகளை முறையாகக் கண்காணிக்காத காட்டூர் காவல்நிலைய ஆய்வாளர் லதா உள்ளிட்டோரைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மாற்றம்

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், உதவி ஆய்வாளர் முத்துவைக் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி இன்று (ஏப்.12) உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட உட்கோட்ட உதவி ஆணையருக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

புகார்

இந்த விவகாரம் தொடர்பாக, உணவக உரிமையாளர் மோகன்ராஜ், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், மாநகரக் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரிடம் இன்று புகார் அளித்தார். அதில், தாக்குதலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் முத்து மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in