

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்தபோதும் மாநகரம் புதுப்பொலிவு பெறாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மதுரையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி உள்ள பகுதிகள் ரூ.974 கோடியில் மேம்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது. அதன் பிறகு பெரியார் பஸ் நிலையம், வைகை ஆறு ஆகியவற்றை மேம்படுத்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
மதுரை மக்களும், இத்தனை கோடியில் இப்பணி நிறை வேற்றப்படுவதால் புதுப்பொலிவு பெறும் என எதிர்பார்த்தனர்.
வைகை ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீரைத் தேக்கி வைக்கவும், ஆற்றின் இருபுறமும் ஸ்மார்ட் சாலைகள் அமைக் கவும் திட்டமிடப்பட்டது. நகர விரிவாக்கத்துக்கு ஏற்றவாறு இந்த சாலைகள் வழியாக நகரின் எந்தப் பகுதிக்கும் நெரிசல் இன்றி மக்கள் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் நடைபாதைகள், சைக்கிளிங் பாதைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் வைகை ஆற்றின் கரைகளில் ஏற்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது.
ஆற்றின் கரையோரங்களில் மண்டபங்கள் கட்டி ஆண்டு முழுவதும் கலாச்சாரத் திருவிழாக்களை நடத்தவும் திட்டமிடப்பட்டது. சாக்கடை, ஆலைக் கழிவுகள் ஆற்றில் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதில் ஒன்றுகூட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 80 சதவீதப் பணிகள் நிறைவடையும் நிலையில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் அமைக்கப்படும் சாலைகள், தொடர்ச்சியாக இல்லாமல் ஆங்காங்கே பாதியில் நிற்கின்றன. அதனால் வைகை கரையோரச் சாலையில் வரும் வாகனங்கள், பல இடங்களில் நகருக்குள் மீண்டும் வந்தே செல்ல வேண்டி இருக்கிறது.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகக் கூறி பெரியார் பஸ் நிலையம், மீனாட்சியம்மன் கோயில் பகுதிகளில் பெயரள வுக்குப் பல அடுக்கு வாகனக் காப்பகங்கள் அமைக்கப்படு கின்றன. பெரியார் பஸ் நிலை யத்தில் உள்ள பல அடுக்கு வாகனக் காப்பகம், அங்குள்ள வணிக வளாகக் கடைகளுக்கு வருவோருக்கு மட்டுமே பய னளிக்கும்.
மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் தற்போதும் போக்கு வரத்து நெரிசல் உள்ளது. அங்குள்ள சாலைகளை வாகன ஓட்டுநர்கள் கடப்பது சவாலாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டியில் மதுரை புதுப்பொலிவு பெறும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது இந்தத் திட்டத்தால் மதுரை நகர் எந்தப் பொலிவும் பெறவில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் கூறியதாவது:
ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது அனைத்து வசதிகளுடன் கூடிய நகரங்களை உருவாக்குவதே ஆகும். லண்டன், பெர்லின், நியூயார்க் போன்ற உலகின் முக்கிய நகரங்களில் உள்ள ஸ்மார்ட் சிட்டிகளைப் போலவே இந்தியாவில் 100 நகரங்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். ஆனால், அந்த நோக்கம் எதுவும் நிறைவேறவில்லை.
‘ஸ்மார்ட் சிட்டி’ பணி நிறைவேற்றப்பட்டும் மதுரையில் மழைக் காலத்தில் மழை நீர் தேங்கி நிற்கிறது. வெயில் காலத்தில் புழுதி பறக்கிறது. வாகன நெரிசல் நிரந்தரமாகிவிட்டது.
மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் தொடங்கும்போது உலகத் தரம் வாய்ந்த தொழில் நுட்பத்துடன் கூடிய அனைத்து கட்டமைப்பு வசதிகள், கம்பி யில்லாத தடையற்ற மின்சாரம், சுத்தமான குடிநீர், பளபளக்கும் சாலைகள், பார்க்கிங் வசதிகள், டிஜிட்டல் மயமான பொதுச் சேவைகள் ஆகியவை கிடைக் கும் எனக்கூறப்பட்டது. ஆனால், எதுவும் தற்போது வரை நிறை வேற்றப்படவில்லை என்றார்.