

கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது ஒரு சமூக சேவை, குடும்ப சேவை என புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் வங்கி ஊழியர்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகப் பணியாளர்களுக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஏப்.10) நடைபெற்றது. இந்த முகாமை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
‘‘கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் மூலம் நமக்கும், குடும்பத்தினருக்கும், நம்மால் மற்றவருக்கும் நோய் வராமல் பாதுகாத்துக் கொள்கிறோம். தடுப்பூசி எடுத்துக்கொள்வது ஒரு சமூக சேவை, குடும்ப சேவை. தடுப்பூசி எடுத்துக்கொண்டால், அலர்ஜி, மயக்கம் வரும் எனக் கருதி பலர் நமக்கு இருக்கிற வாய்ப்பை நழுவவிட்டு விடுகின்றனர்.
உலகம் முழுவதும் நம்முடைய தடுப்பூசிக்காகக் காத்திருக்கிறார்கள். தடுப்பூசி கிடைக்காமல் நாம் திண்டாடக் கூடாது என்பதற்காகத்தான் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காகத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. தற்போது 18 வயதினருக்கும், இளைஞர்களுக்கும் ஏன் தடுப்பூசி கொடுக்கவில்லை என்று கேட்கின்றனர். யார் அதிகம் பாதிக்கப்படுவார்களோ அவர்களுக்குத் தடுப்பூசி கொடுக்கிறோம்.
இளைஞர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இளைஞர்களுக்குத் தொற்று வந்தால் பாதிப்பு குறைவாகவே இருக்கும். வயதானவர்களுக்கு வந்தால் உயிரைப் பாதுகாப்பது சில நேரங்களில் பெரிய பிரச்சினையாகிவிடும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளைக் கழுவ வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்போது நான் சாலை வழியாக வந்தபோது பலர் முகக்கவசம் அணியாமல் சென்றதைப் பார்த்தேன். அபராதம் விதிக்க வேண்டும். மக்களைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. மக்களே கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
தொற்றுள்ள ஒருவர் முகக்கவசம் போடாமல் சென்றால், அவர் 46 பேருக்குத் தொற்றைப் பரப்புவார். ஆகவே, முகக்கவசம் போடுவது நமக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பாதுகாப்பதற்குத்தான். இது நம்முடைய சமூகக் கடமை. ரூ.10 முகக்கவசத்தை வைத்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்கிறோம். ஆனால், முகக்கவசம் போடமாட்டோம் என்றால், அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
முகக்கவசம் போடுவது கரோனாவைத் தடுப்பதற்கு மிகவும் எளிய முறையாகும். முகக்கவசம் அணிந்துகொண்டு தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தால் நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நமக்குத் தொற்று வந்தால் நாம் மட்டுமல்ல குடும்பமே கஷ்டப்படுகிறது. நம்மைத் தனிமைப்படுத்தினால் தனி அறை ஏற்பாடு செய்ய வேண்டும்.
தனியாகச் சமைத்துக் கொடுக்க வேண்டும். தெலங்கானாவில் ஒரே நாளில் 30 மருத்துவர்களுக்குத் தொற்று ஏற்பட்டது. இதனால் அவர்கள் மனம் உடைந்து போனார்கள். இதையடுத்து நம்பிக்கை ஊட்டும் விதமாக நான் பிபிஇ கிட் போட்டுக்கொண்டு சென்று மருத்துவர்களைச் சந்தித்துப் பேசினேன். அப்போது 30 நிமிடம் பிபிஇ கிட் போட்டுக்கொண்டு என்னால் இருக்க முடியவில்லை.
ஆனால், மருத்துவர்கள் 24 மணி நேரமும் பிபிஇ கிட் அணிந்துகொண்டு மூச்சு கூட விட முடியாமல் நமக்காகப் போராடுகின்றனர். அவர்களுக்காகவாது நாம் முகக்கவசம் போட்டுக்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவதன் மூலம் 90 சதவீதம் நோய் பரவாமல் கட்டுப்படுத்தலாம். அபராதம் போட்டு விடுகிறார்கள். அதனால் முகக்கவசம் அணிகிறேன் என்று இருக்கக் கூடாது. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் முகக்கவசம் போட வேண்டும்.
இன்று கூட தொற்று அதிகரித்துள்ளது. அபாயகரமான கட்டத்தில் இருக்கிறோம். நாம் எச்சரிக்கையாக இருக்கவில்லை என்றால் பழைய நிலைக்கு வந்துவிடுவோம். அந்த நிலைக்கு நாம் வந்துவிடக் கூடாது. இதற்காக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 100 இடங்களில் தடுப்பூசி மற்றும் கரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படவுள்ளது. எனவே, அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதால் பெரிதாக யாருக்கும் அலர்ஜி வரவில்லை. நீங்கள் (வங்கி ஊழியர்கள்) தான் தடுப்பூசியின் தூதுவர்கள். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.’’
இவ்வாறு தமிழிசை பேசினார்.
முகாமில் சுகாதாரத்துறைச் செயலர் அருண், மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள், வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.