

நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்கு பள்ளிவாசல்களுக்கு விலையில்லா பச்சரிசி வழங்குவதற்கான உத்தரவை அரசு உடனடியாக வெளியிடுவதுடன், இரவு 10 மணி வரை பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் இன்று (ஏப்.09) வெளியிட்ட அறிக்கை:
"ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு இருப்பது வழக்கம். நோன்புக் காலத்தில் தினமும் சுமார் 15 மணி நேரம் விரதம் இருந்து, நோன்புக் கஞ்சி குடித்து விரதத்தை முடிப்பர்.
நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்குத் தேவையான பச்சரிசியை, தமிழ்நாடு அரசு அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் பல ஆண்டுகளாக விலையில்லாமல் வழங்கி வருகிறது. நிகழாண்டு ரம்ஜான் நோன்பு ஏப்.14-ல் தொடங்கவுள்ள நிலையில், பள்ளிவாசல்களுக்கு விலையில்லா பச்சரிசி வழங்குவதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடவில்லை.
தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், பள்ளிவாசல்களுக்கு விலையில்லா பச்சரிசி வழங்க அரசின் தலைமைச் செயலாளர் உடனடியாக உத்தரவு வெளியிட வேண்டும்.
மேலும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏப்.10-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், நோன்புக் காலத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட வேண்டிய கடமை உள்ளதால், இரவு 10 மணி வரை பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்".
இவ்வாறு காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.