

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலையின் வேகத்தைப் பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என ஆட்சியர் கோவிந்த ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மேல வீதியில், உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடந்தது. இதை ஆய்வு செய்த பின்னர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நிருபர்களிடம் கூறியதாவது;
''தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒவ்வொரு நாளும் சராசரியாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகளவில் தொற்றால் பாதிக்கப்படுவர்கள் உள்ள பகுதிகளில், காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களையும் பரிசோதனை செய்து வருகிறோம். மேலும், 3 நபர்களுக்கு மேல் தொற்று உறுதியான பகுதியைச் சுகாதாரத் துறைச் செயலர் அறிவுறுத்தலின்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துக் கண்காணித்து வருகிறோம்.
தொடர்ந்து நாளொன்றுக்கு சுமார் 2,500 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அத்துடன் 60 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும் சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதுவரை 127 பேர் வல்லத்தில் உள்ள கரோனா கேர் சென்டரில், தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை கண்காணிக்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை மாவட்டத்தில் 68,607 பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
அதைப் போல கரோனா முதல் அலையின்போது அனைவரும் முறையாக முகக்கவசம் அணிந்ததால், மாவட்டத்தில் அதிகளவில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் இருந்தது. தற்போது இரண்டாவது அலையின் வேகம் அதிகளவில் இருப்பதால், கண்டிப்பாக மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்''.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்தார்.