

மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 4 வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்தி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி,சோழவந்தான், மேலூர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுக்கென சுமார் 5021 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மின்னணு இயந்திரங்கள் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.
இதன்பின், லாரிகள் மூலம் ஏற்றி, வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இதன்படி, மதுரை மேற்கு, தெற்கு, வடக்கு, மத்திய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழ்நாடு பாலிடெக்கிற்கும், உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகளுக்கான இயந்திரங்கள் தனக்கன்குளத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழக கட்டிடத்திற்கும், மதுரை கிழக்கு, மேலூர் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒத்தக்கடை பகுதியிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லூரிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
ஒவ்வொரு மையத்திலும் 3 சுழற்சி முறையில் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சுழற்சியிலும் டிஎஸ்பி தலைமையில் காவல் ஆய்வாளர்கள், எஸ்.ஐ.,க்கள் , 60க்கும் மேற்பட்ட காவலர்கள் துப்பாக்கியுடன் பாதுகாப்புப் பனியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.