Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

மீண்டும் ஆட்சி அமைப்போம் - அதிமுக; மு.க.ஸ்டாலின் முதல்வராவார்- திமுக

திருச்சி

தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்கள், தேர்தலில் வெற்றி தங்கள் கட்சியே ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினர்.

திருச்சி கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி என்.நடராஜன், பாலக்கரை பகுதியில் உள்ள மதரஸா பள்ளி வாக்குச்சாவடிகளில் தனது வாக்கைச் செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும்’’ என்றார்.

திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு, தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘தமிழகம் முழுவதும் திமுகவுக்குச் சாதகமான அலை வீசி வருகிறது. இந்தத் தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாக ஏற்படும். மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார்’’ என்றார்.

திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மேற்குத் தொகுதிக்குட்பட்ட கிராப்பட்டி சிறுமலர் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது தாயாருடன் வந்து வாக்களித்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். திமுக கூட்டணி வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பது உறுதி’’ என்றார்.

இதேபோல, லால்குடி தொகுதி திமுக வேட்பாளர் அ.சவுந்தரபாண்டியன் மால்வாய் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மணப்பாறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.சந்திரசேகர் பழுவஞ்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, அமமுக ரங்கம் தொகுதி அமமுக வேட்பாளர் சாருபாலா ஆர்.தொண்டைமான் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் பொன்மலைப்பட்டி இன்ஃபன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி எட்டரை அரசு மேல்நிலைப் பள்ளி, திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பத்மநாபன் கருமண்டபம் ஆரோக்கியமாதா மெட்ரிகுலேசன் பள்ளி, மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.கதிரவன் இனாம்சமயபுரம் குமரன் மானிய தொடக்கப் பள்ளி, முசிறி தொகுதி திமுக வேட்பாளர் என்.தியாகராஜன் தொட்டியம் ஒன்றியம் காடுவெட்டி, தேமுதிக வேட்பாளர் பி.கிருஷ்ணகோபால் மணப்பாறை நகராட்சித் தொடக்கப் பள்ளி, திருவெறும்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் எம்.முருகானந்தம் குமரேசபுரம் ஊராட்சி பள்ளி, திருச்சி கிழக்குத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் டி.வீரசக்தி செம்பட்டு ஆபட் மார்சல் ஆர்.சி. பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x