

மதுரை மாவட்டத்தில் முற்பகலில் குறிப்பிட்ட 3 மணி நேரம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்த நிலையில், மதியம் 1 மணிக்கு மேல் சற்று மந்தமானது.
இதனால் மொத்தமாக 50 முதல் 55 சதவீதம் மட்டுமே பதிவாகுமோ என, வேட்பாளர், கட்சியினர் நிர்வாகிகள் கவலை அடைந்தனர். இருப்பினும், 2 மணிக்கு மேல் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து 5 மணிக்கு 65 சதவீதத்தைத் தாண்டியது.
எந்திரம் பழுதால் மீண்டும் வாய்ப்பு கேட்ட பெண்;
மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கருப்பாயூரணி அப்பர் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இங்குள்ள 45வது பூத்தில் சுமார் 8 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுதடைந்தது. சிறிது நேரத்தில் அது சரிசெய்யப்பட்டது. இருப்பினும், எந்திரம் பழுதுக்கு முன்பாக வாக்களித்த சாந்தி என்பவர், தனது ஓட்டுப்பதிவாகவில்லை, மீண்டும் தனக்கு வாய்ப்பளிக்கவேண்டும், என, தேர்தல் அதிகாரியிடம் வாதிட்டார். அவரது ஓட்டுப் பதிவாகி இருக்கிறது என்பதை அறிவுறுத்தியும் அவர் கேட்காமல் வாதம் செய்ததார். ஒரு கட்டத்திற்கு மேலும் கேட்காததால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை அறையைவிட்டு வெளியேற்றினர். பின்னர் அவர் தேர்தல் அலுவலர், காவல்துறையினரால் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
‘ஸ்டேடஸில் ’ வாக்குப்பதிவு விவரம் பதிவிட்ட வாக்காளர்;
மதுரை திருமங்கலம் அருகில் டி. குண்ணத்தூர் பகுதியிலுள்ள பூத் ஒன்றில், வாக்காளித்த ஒருவர், தனது செல்போனில் வாக்குப்பதிவு எந்திரம், அவர் யாருக்கு ஓட்டளித்தார் போன்ற விவரத்தை பதிவு செய்து, அவற்றை தனது செல்போனில் ‘ஸ்டேட்டஸில்’ வைத்துள்ளார். இதுபற்றி அறிந்த போலீஸார் அந்த நபரை பிடித்து வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர் முறையாக புகார் செய்ததால் நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஓட்டுக்கு டோக்கன் விநியோகமா?
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட மேல அனுப்பானடி பகுதியிலுள்ள பாலையம்பட்டி நாடார் உறவின்முறை பள்ளி ஓட்டுச்சாவடி அருகில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் சிலர் ஓட்டுக்கு டோக்கன் கொடுத்ததாகத் தெரிகிறது. இதனை திமுக கூட்டணிக் கட்சியினர் தடுத்தனர். இச்சம்பவத்தை கண்டித்து பொன்னுத்தாயி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மறியல் செய்தனர்.புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல்துறை உறுதியளித்தால் கலைந்தனர்.
வாக்கு சேகரித்த தேர்தல் அலுவலர் மீது புகார் ?
திருமங்கலம் தொகுதியில் கட்ராம்பட்டி ஓட்டுச்சாவடியில் தேர்தல் அலுவலர் ஒருவர் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு பெண்களிடம் வாக்குச் சேகரித்தாக புகார் எழுந்தது. இது தொடர்பாக திமுக, அமமுக வேட்பாளர்கள் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முறையிட்டனர்.