தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் புதிய அவதாரம் எடுக்கும்: புள்ளிவிவர பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி நம்பிக்கை

பிரவீன் சக்கரவர்த்தி
பிரவீன் சக்கரவர்த்தி
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் புதிய அவதாரம் எடுக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் புள்ளிவிவர பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்தசிறப்பு பேட்டியில் கூறியதாவது:

புதுச்சேரியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கருத்துக் கணிப்பு எடுத்தேன். அதில், ‘புதுச்சேரியில் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா?’ என்று கேட்டேன். வாய்ப்பே கொடுக்க கூடாது என்று 81 சதவீதம் பேர் கூறினர்.

ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்தால், பாஜகவை பற்றியே பேசுவதுபோல மாற்றுவது அவர்களது வழக்கம். வட இந்தியாவில் எடுக்கப்படும் இந்த உத்தி, தமிழகம் உட்பட தென் இந்தியாவில் பாஜகவுக்கே எதிராக அமைந்துவிடுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறைவாக இருப்பதாக சிலர் கூறிவருகின்றனர். எத்தனை இடங்களில் போட்டியிடுகிறோம் என்பது முக்கியம் அல்ல. எத்தனை இடங்களில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவை செல்கின்றனர் என்பதுதான் முக்கியம்.

2024 நாடாளுமன்றத் தேர்தல்தான் எங்கள் இலக்கு. காங்கிரஸ் கட்சிக்கு திருப்பமே தமிழகத்தில் இருந்துதான் தொடங்கும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தது 20 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பாஜக எதிர்ப்பு அலை தமிழகத்தில் இருந்து தொடங்கும். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுக்கும். பாஜகவுக்கு எதிராக தமிழக மக்கள் இருப்பதை மாதிரியாக வைத்து, பிஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளோம். அந்த வாய்ப்பை தமிழகம் எங்களுக்கு கொடுத்துள்ளது. தேர்தலுக்கு பிறகு பாஜக எதிர்ப்பில் நாட்டுக்கே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும். எனவே, காங்கிரஸ் கட்சிக்கு தமிழக தேர்தல் மிகவும் முக்கியம்.

மக்களை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி மட்டும்தான் உறுதியாக பாஜகவுக்கு எதிராக இருப்பதாக நினைக்கின்றனர். அதிலும், ராகுல் காந்தி பயமில்லாமல் பாஜகவை எதிர்க்கிறார் என்று மிகவும் நம்பிக்கையாக பார்க்கின்றனர்.

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி வர வேண்டும் என்று கட்சியினர் 90 சதவீதம் பேர் விரும்புகின்றனர். ஒருசில தலைவர்கள் ஏற்கவில்லை என்பதற்காக, ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியே ஏற்கவில்லை என்று அர்த்தம் அல்ல.

இவ்வாறு பிரவீன் சக்கரவர்த்தி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in