

புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், உழவர்கரை தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் அங்காளன் (எ) தேவ.பொழிலன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஜவஹர் நகர், பூமியான்பேட் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று (ஏப்.4) பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
''புதுச்சேரியில் தேர்தலுக்கு முன்பு அதிருப்தியில் இருந்த எம்எல்ஏக்களை விலை பேசி விலகச் செய்து காங்கிரஸ் அரசை பாஜகவினர் கவிழ்த்தனர். இதற்கு என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகள் துணைபோயுள்ளன.
தமிழகத்தையும், புதுச்சேரியையும் குறிவைத்து பாஜக தேர்தலைச் சந்திக்கிறது. தமிழகத்தில் அதிமுகவைக் கட்டுக்குள் வைத்துள்ளதால், அடுத்து புதுச்சேரிக்கு வந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக, இங்கிருந்த காங்கிரஸ் அரசைத் துணைநிலை ஆளுநர் மூலம் செயல்படவிடாமல் முடக்கி வைத்தனர். இறுதியாக ஆட்சியைக் கவிழ்த்து, பாஜக ஆட்சியை ஏற்படுத்த முயன்றுள்ளனர்.
இதனை முறியடிக்கவே காங்கிரஸ், திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி சேர்ந்துள்ளன. புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்துக்கும் பாதிப்பு ஏற்படும். இங்குள்ள அரசியல், கலாச்சாரம், மத ஒற்றுமை, சமூக நீதி கடுமையாக பாதிக்கப்படும்.
இதனைத் தடுப்பதற்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற வேண்டும். புதுச்சேரியைக் காப்பாற்ற மக்கள் பாஜகவைக் காலூன்ற விடக்கூடாது. இதற்காகவே நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போராடி வருகிறோம். இங்கு பல கோடி ரூபாயைப் பிற கட்சியினர் செலவிடுகின்றனர். எங்களிடம் பணமில்லை, மக்களை நம்பியே களத்தில் இருக்கிறோம்.
அதிமுகவினர் கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டி வைத்துத் தேர்தலில் செலவிடுகின்றனர். வாக்குக்கு ரூ.1,000 கொடுக்கின்றனர். அரசியல் கட்சியினருக்கு இவ்வளவு தொகை எங்கிருந்து வந்தது. மக்களுடைய வரிப் பணத்தில் கொள்ளையடித்ததை இங்கே செலவிடுகின்றனர். பாஜகவினரின் தொகையாகவும் அது இருக்கலாம்.
ஒரு ஆடு, மாடு, கோழியை விட மிகக்குறைந்த விலையாக ரூ.1,000 அளிப்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அது கொள்ளைப் பணம். அதை வாங்கிப் பானையில் வைத்துவிட்டு, வாக்கைப் பானைக்குச் செலுத்துங்கள். பாஜகவுக்கும், அவர்களுக்குத் துணைபோகும் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுகவினருக்கும் பாடம் புகட்ட வேண்டும். தேர்தலுக்குப் பிறகு என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விலை போகலாம். விசிக எம்எல்ஏ விலைபோக மாட்டார். இத்தேர்தலில் ஒவ்வொரு தொகுதியும் ஆட்சியைத் தீர்மானிப்பவையாகும்''.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.