

கும்பகோணம் மகாமக குளத்தைச் சுற்றி 16 கல் மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களை கட்டியது நாயக்க மன்னர்கள் ஆட்சியில் முதன்மை அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர்.
கன்னடரான மைசூர் தசரத ராம அய்யரின் மகன்தான் கோவிந்த தீட்சிதர். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களான சேவப்ப நாயக்கர், அட்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் இம்மூவரின் ஆட்சி காலங்களில் முதன்மை அமைச்சராகவும் குல குருவாகவும் இருந்தவர் கோவிந்த தீட்சிதர்.
ரகுநாத நாயக்கர் தனது ஆட்சி காலத்தில் கோவிந்த தீட்சிதரின் சேவையை மெச்சி அவருக்கு எடைக்கு எடை பொன் கொடுத்தார். அதை அறப்பணிகளுக்குச் செல விட்ட கோவிந்த தீட்சிதர், கும்ப கோணம் மகாமகக் குளத்துக்கு படிக்கட்டுகள் அமைத்ததுடன் குளத்தைச் சுற்றிலும் 16 மண்டபங் களை எழுப்பினார்.
இவரது காலத்தில் கும்பகோணம் யாகசாலை தெருவில் இவரால் கி.பி.1542-ல் தொடக்கப் பட்ட ’ராஜவேத காவிய பாட சாலை’க்கு இப்போது வயது 473.
கோவிந்த தீட்சிதர் வழி வந்த ஒன்பதாம் தலைமுறை வாரிசான ரவி தீட்சிதர் வேதபாடசாலை குறித்து ’தி இந்து’விடம் பேசினார். ’’ராஜவேத காவிய பாடசாலையில் வேதம் படித்தவர்கள் இப்போது உலகம் முழுவதும் உள்ளனர். வேத பாராயணங்களை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இங்கு தங்குமிடம், உணவு உள்ளிட்டவை இலவசமாக கொடுத்து மூன்று வேதங்களையும் முறைப்படி கற் றுத் தருகின்றனர். மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரையிலான வேத படிப்புகள் இங்கு உள்ளன. வேதம் படித்துக் கொண்டே பள்ளிப்படிப்பையும் தொடரலாம்’’ என்றார் ரவி தீட்சிதர்.
பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த கோவிந்த தீட்சிதரின் ராஜவேத காவிய பாட சாலை மகாமக திருவிழாவை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் முதல் புதுப்பிக்கப்பட்டு வந்தது. இதற் கான பணிகள் முடிந்து இன்று (நவ.1) மீண்டும் திறக்கப்படுகிறது.