

தென்காசி மாவட்டம், ஆலங்குளத் தில் சமக வேட்பாளர் செல்வ குமாரை ஆதரித்து அக்கட்சி தலைவர் சரத்குமார் நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 53 ஆண்டுகள் 2 திராவிட இயக்கங்கள் ஆட்சி செய்துள்ளன. அதற்கு ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக நல்லவர்கள், வல்லவர்கள், தொலைநோக்கு சிந்தனை உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால், நட்ராஜன் என்பவரை ஓராண்டுக்கு முன்பு வரை யாருக்கும் தெரியாது. அவரிடம் திறமை இருந்தது, அதனை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. அதை நட்ராஜன் பயன்படுத்திக்கொண்டார். இப்போது இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என பெயர் எடுத்துள்ளார்.
அவரைப்போல் புதிய மாற்றத்தை நாங்கள் உருவாக்கு வோம். தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம். தொழில் வளத்தை பெருக்கி, வேலைவாய்ப்புகளை அதிகரிப்போம். வெளிப்படையான நிர்வாகம் அளிப்போம். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டதால் அவர்களுக்கு மக்கள் அடிமை யாகிவிட்டனர்.
சாதாரண குடிமகன், மக்களுக் காக சேவை செய்பவன் சட்டப் பேரவை உறுப்பினராக வர வேண்டும். ஓட்டுக்கு வாங்கும் பணம் உடம்பில் ஒட்டாது. உழைத்து சாப்பிடும் பணம் தான் உடம்பில் ஒட்டும்.
சைக்கிளில் பேப்பர் போட்டு, சைக்கிள் மெக்கானிக், பைக் மெக்கானிக் என பல தொழில்களை செய்தேன். இன்று எனக்கு வேலை இல்லாவிட்டால் இந்த கடையில் சேல்ஸ்மேனாக இருப்பேன். ஹோட்டலில் மேஜை துடைப்பேன், கழிப்பறையை கழுவச் சொன்னாலும் கழுவுவேன். அதில் சம்பாதிக்கும் பணத்தில் மகிழ்ச்சியாக குடும்பத்தை காப்பாற்றுவேன்.
நீங்கள் உழைத்து சம்பாதிக்க வேண்டும். ஓட்டுக்காக பணம் வாங்காமல் வாக்களித்தால் அரசியலில் மாற்றம் வரும். திமுக தலைவர் ஸ்டாலின் மகன் இப்போதே காவல்துறை அதிகா ரியை மிரட்டுகிறார்.
இவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களை என்ன செய்வார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள்” என்றார்.
தூத்துக்குடியில் நேற்று சரத்குமார் பிரச்சாரம் செய்தார்.