

ஆண்டிபட்டி அதிமுக வேட்பாளர் லோகிராஜன் வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பணம் கொண்டு செல்வது தெரியவந்த நிலையில், அவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பஞ்சராஜா தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது அதிமுக வேட்பாளர் லோகிராஜனின் இரண்டு பிரச்சார வாகனங்கள் வந்தன.
அந்த சோதனையில் வாக்காளர்களுக்கு ரூ.28 ஆயிரம் பணத்தைப் பட்டுவாடா செய்வதற்காகக் கொண்டு செல்வது தெரியவந்தது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு வாகனத்திற்கு அனுமதி பெறாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேட்பாளர் லோகிராஜன், அவரது சகோதரர் குபேந்திரன், நிர்வாகி பிரபு, டிரைவர்கள் பாலமுருகன், பாண்டி ஆகியோர் மீது ராஜதானி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆண்டிபட்டி, போடியில் கடந்த இரண்டு நாட்களாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அதிமுக ஒன்றியத் துணைச் செயலாளர் அமரேசன் பங்களாவில் இருந்து ரூ.2.17 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.